×

பாதியில் முடிந்த சிவன்மலை கிரானைட் குவாரி கருத்து கேட்பு கூட்டம்

காங்கயம், ஆக.17: காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள கிரானைட் குவாரிக்கு அனுமதி பெறுவதற்கான நேற்று நடந்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் பாதியில் முடிந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி மலைக்கோயில் அடிவாரப் பகுதியில் உள்ள கிரிவலப்பாதை அருகே, 17.9 ஹெக்டர் (சுமார் 45 ஏக்கர்) அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் குவாரி உள்ளது. தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு சொந்தமான மேற்கண்ட குவாரியில் கலர் கிரானைட் கற்துண்டுகளை வெட்டி எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்டு கூட்டம் சிவன்மலை கிரிவலப் பாதையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு கனிமவள நிறுவன துணை மேலாளர் கணேசன், திருப்பூர் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் மற்றும் சிவன்மலை பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், கனிம வள நிறுவன துணை மேலாளர் கணேசன், மேற்கண்ட குவாரியில் கலர் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கும் திட்டம் குறித்தும், அதனுடைய செயல்பாடு குறித்தும் மற்றும் குறும்படம் மூலமும் விளக்கி எடுத்துரைத்தார். ஆனால் இதற்கு இடையிலேயே கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, முகிலன்உள்ளிட்டோர் எழுந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு விதிகளின்படி உள்ள 40 வகையான ஆவணங்கள் இதில் இணைக்கப்படவில்லை என்றும், இங்குள்ள இயற்கை வளத்தை எடுத்துச் செல்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிரானைட் கல் குவாரியில் கல் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யவும் வலியுறுத்தி, முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் கல்குவாரி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் கலந்துகொண்ட காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ் குமார் பேசிய போது, காங்கயம் ஒன்றியக் கவுன்சிலர் கூட்டத்தைக் கூட்டி இத் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், சிவன்மலை ஊராட்சி ஒன்றியத்திலும் இதற்கு எதிராக தீர்மான நிறைவேற்றப்படும் எனவும், இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் பாதியில் கூட்டத்தை விட்டு எழுந்து சென்று விட்டார். இவரைத் தொடர்ந்து மற்ற அலுவலர்களும் சென்று விட, பொதுமக்களும் எந்தவித முடிவும் தெரியாமல் கலைந்து சென்றனர்.

The post பாதியில் முடிந்த சிவன்மலை கிரானைட் குவாரி கருத்து கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivanmalai ,Granite Quarry ,Kangayam ,
× RELATED வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது