×

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணிபுரிய தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருப்பூர், ஆக. 17: பீகார் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது.
திருப்பூரில் பனியன் தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூரில் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோல் வேலைவாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு ஒடிசா, பீகார், உ.பி., ம.பி. உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவு வேலை தேடி வருகிறார்கள். இந்நிலையில் வேலை தேடி வருகிற தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து, வேலையை பழகிக்கொள்கிறார்கள். இதற்கு 3 மாதம் வரை ஆகிறது.

இந்நிலையில் பீகார் அரசு பீகாரில் இருந்து திருப்பூருக்கு வருகிற தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அனுப்பும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் அப்பாச்சிநகரில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் திருக்குமரன் முன்னிலை வகித்தார். பீகார் மாநில திறன் மேம்பாட்டு இயக்ககத்தின் கூடுதல் முதன்மை செயல் அதிகாரி ராஜீவ் ரஞ்சன், திறன் மேம்பாட்டு இயக்குனர் சஞ்சய் குமார் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் பீகார் அதிகாரிகள் பேசியதாவது: பீகார் மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமானவர்கள் வேலை தேடி செல்கிறார்கள். குறிப்பாக திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு பலர் வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கி, அவர்களது திறமைகளையும் வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்ய வருகிற பீகார் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 3 மாதம் வரை பயிற்சி கொடுத்து, அதன் பின்னர் பணியில் அமர்த்தும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்ட பீகார் அரசு, மாநில அரசு திறன் மேம்பாட்டு இயக்ககத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி, உடனடியாக பணிகளை மேற்கொள்ளும் வகையில் தயார் செய்து வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தொழில் தெரிந்த தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள். இந்த தொழிலாளர்களை பயன்படுத்திக்கொள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது: பீகார் மாநில அதிகாரிகள் அங்கு பயிற்சி அளித்து தொழிலாளர்களை அனுப்ப தயாராக உள்ளனர். இதுபோல் திருப்பூரில் பயிற்சி மையம் அமைத்தும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஏற்பாடுகளை செய்து கொடுத்தால், அதற்கான செலவுகளை ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு முடிவை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளோம். மேலும், இது தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அந்த கூட்டத்தில் ஆலோசனைகளுக்கு பின்னரான முடிவுகள் குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணிபுரிய தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Bihar ,Tirupur Exporters Association… ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...