×

கொடிசியாவில் ‘தமிழ்நாடு ஸ்டார்ட் அப்’ திருவிழா

 

கோவை, ஆக. 17: கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியாவில் ‘ஸ்டார்ட் ஆப் திருவிழா’ வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதனை காணொலி மூலமாக தமிர்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் இயக்குனர், தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அளவில் தமிழ்நாட்டில் அதிகளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. ஜிடிபியில் இரண்டாவது இடத்தில் உள்ளோம். இந்நிலையில், தமிழ்நாட்டின் புதுத்தொழில் சூழலை வலுப்படுத்தவும், புதுயுக தொழில் முனைவில் உலகளாவிய அளவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடனும் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது, கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 19,20 ஆகிய இரண்டு நாட்கள் “தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா” நிகழ்வினை நடத்துகிறது.

புத்தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்துகின்ற இந்த மாபெரும் விழாவில் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50-க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மேலும், முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில் முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்வுகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைத்து விழா பேருரை ஆற்றுகிறார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை உரையாற்றுகிறார்.

தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா சிறப்புரையாற்றுகிறார். அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு தொழில் முனைவுக்கான அரசின் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்து விளக்கமளிக்க உள்ளனர். கண்காட்சியினை பார்வையிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில், தொழில்முனைவோர்கள் முதலீட்டாளர்கள், தொழில் முனைவு வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டுநர்கள் ஆகியோரோடு கலந்துரையாடவும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து அங்கு நடக்க உள்ள கருத்தரங்கத்தில் பங்கேற்க 1500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அரங்கில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழில் முனைவோர்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

“மாபெரும் தொழில் கனவு” என்னும் கருத்துருவோடு தமிழ்நாடு அரசால், முதல் முறையாக இது நடத்தப்படுகிறது. இது இளைய தலைமுறையினர் இடையே தொழில் முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவும். தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை நடத்தும் இத்திருவிழாவில் தொழில்முனைவோர்கள், ஆர்வலர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கொடிசியாவில் ‘தமிழ்நாடு ஸ்டார்ட் அப்’ திருவிழா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Start Up' festival ,Kodisia ,Start of Festivitia ,Avinasi Road, Gov 19 ,
× RELATED பயமில்லையாம்… ஆனா பாஜவை விமர்சிக்க...