×

ஆடி அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறை, கொடுமுடியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

 

பவானி, ஆக.17: பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதி சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் வருடந்தோறும் ஆடி அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடுவதோடு, தங்களின் மூதாதையர்களுக்கு திதி கொடுத்தும், எள், தண்ணீருடன் தர்ப்பணம் கொடுத்தும், பிண்டம் வைத்தும் வழிபாடு நடத்துவர். மேலும், திருமண தடை, நாக தோஷம் உட்பட பல்வேறு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்வதும் வழக்கம். ஆடி மாதத்தின் 2-வது அமாவாசை நாளான நேற்று அதிகாலை முதலே கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்கு குவிந்தனர். இதனால், பரிகார மண்டபங்கள் நிறைந்ததால், தற்காலிக மண்டபங்களில் அமர்ந்து எள், தண்ணீர், பிண்டம் வைத்தும் மூத்தோருக்கு வழிபாடு செய்தனர். தொடர்ந்து, காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரர், வேதநாயகி மற்றும் ஆதிகேசவப் பெருமாளுக்கு வழிபாடு நடத்தினர்.

உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்ததால் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் காவிரியில் பக்தர்கள் புனித நீராட பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்புப்படையினர், மீனவர்கள், பவானி போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். பல்லாயிரக்கணக்கானோர் பஸ்கள், கார்கள், வேன்கள், பைக்குகளில் திரண்டு வந்ததால் வாகன நிறுத்துமிடங்கள் நிறைந்து, பழைய பஸ் நிலையம், செல்லியாண்டியம்மன் கோயில் திடல் மற்றும் ரோட்டோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

கொடுமுடி: ஆடி அமாவாசை தினத்தன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை பிறக்கும் என்பதால், நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கொடுமுடி காவிரி ஆற்றில் திரண்டனர். தங்களின் மூதாதையர்களுக்கு மாது பிதுர் தோஷ நிவர்த்தி பரிகாரம், முன்னோர்கள் செய்த பாவம், முன் ஜென்ம சாப தோஷம் உள்ளிட்ட தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் மற்றும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இதற்காக, காவிரி ஆற்றின் பழைய படிக்கட்டு துறை பகுதியில் பக்தர்கள் பரிகாரம் செய்ய வசதியாக சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. காவிரியில் புனித நீராடிய பக்தர்கள் மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக பொது தரிசனத்திற்கும், சிறப்பு தரிசனத்திற்கும் என தனித்தனியே தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், மின்விசிறி, மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. காவிரி ஆறு மற்றும் கோயில் பகுதிகளில் கொடுமுடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களை தடுக்க ஏதுவாக தீயணைப்பு மீட்புப்பணிகள் வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. நகருக்குள் போக்குவரத்து நெருக்கடியை தடுக்கும் விதமாக, வெளியூரிலிருந்து வரும் பஸ்கள், வேன்கள் மற்றும் கார்களை பஸ்நிலையம் மற்றும் நுழைவு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தடுத்து நிறுத்தி வைக்க பேரிகார்டுகள் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொடுமுடி இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

The post ஆடி அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறை, கொடுமுடியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Bhavani Kuduthurai ,Kodumudi ,Aadi Amavasai ,Bhavani ,Kuduthurai ,Aadi Amavasi ,Kaveri ,Amuda ,
× RELATED மாணவ ஊரக வேளாண் பணி