×

பிரபல பின்னணி பாடகர் டிஎம்எஸ் சிலை மதுரையில் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

* இன்று ராமநாதபுரத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம், நாளை மீனவர் மாநாட்டில் பங்கேற்பு

மதுரை: பிரபல பின்னணி பாடகர் மறைந்த டி.எம்.சவுந்தர்ராஜன் முழு உருவச் சிலையை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திறந்து வைத்தார். 3 நாள் பயணமாக வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், நாளை மீனவர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று 9,614 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தமிழ் திரையிசை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பின்னணி பாடகராகவும், 5 தலைமுறை நடிகர்களுக்கு சுமார் 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி புகழ் பெற்றவர் மறைந்த டி.எம்.சவுந்தரராஜன் (100). இவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் மதுரையில் டி.எம்.சவுந்தர்ராஜன் சிலை அமைக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் 11ம் தேதி தமிழ்நாடு சட்டபேரவையில் மானிய கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.

இதன்படி, மதுரை முனிச்சாலை பகுதியில் மாநகராட்சியின் பழைய கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில், ரூ50 லட்சம் மதிப்பில் 450 கிலோ எடையில் 6 அடி உயரத்திற்கு ஒரு அடி பீடத்தின் மீது நிற்கும் வகையில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நேற்றிரவு மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்கவும், இன்றும், நாளையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புது ராமநாதபுரம் ரோடு – சிஎம்ஆர் ரோடு சந்திப்பில் டி.எம்.சவுந்தரராஜனின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்.

பின்னர், சிலை அருகே உள்ள அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அப்பகுதியில் திரண்டிருந்த ஏராளமானோரிடம் மனுக்களையும் முதல்வர் பெற்றார். மறைந்த டிஎம் சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என்று ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். இதன் தொடர்ச்சியாகவே டி.எம்.சவுந்தரராஜனின் சொந்த ஊரான மதுரையில், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அவரது முழு உருவச்சிலையை திறந்து வைத்தார். இதன்பிறகு இரவில் தனியார் ஓட்டலில் தங்கினார். இன்று மாலை ராமநாதபுரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் வடக்கு, தெற்கு, தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு. மதுரை மாநகர், மதுரை வடக்கு, தெற்கு. தூத்துக்குடி வடக்கு,

தெற்கு, திருநெல்வேலி மத்தி, கிழக்கு. தென்காசி வடக்கு, தெற்கு, மற்றும் கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு என திமுக அமைப்பு ரீதியிலான 19 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடக்கிறது. நாளை (ஆக. 18) மண்டபத்தில் மீனவர்கள் மாநாடு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா நடக்கிறது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆலோசனை வழங்குகிறார். கூட்டம் முடிந்து மாலையில் ராமேஸ்வரம் செல்லும் அவர் தனியார் விடுதியில் இரவு தங்குகிறார். மறுநாள் (ஆக. 18) காலை ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு,

காலை 9.30 மணிக்கு மண்டபம் பகுதியில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து மீன்வளத்துறை உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளின் சார்பில் 9,614 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பகல் 12.30 மணிக்கு விழா முடிந்ததும் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர் சிறிது ஓய்விற்கு பிறகு, பிற்பகலில் மதுரை புறப்படுகிறார். ஓய்வு நேரத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகள், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டி.எம்.எஸ் என்றென்றும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுவார்: முதல்வர் டிவிட்
முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவை தனது காந்த குரலால் கட்டிப் போட்டு – நாற்பது ஆண்டுகள் கோலோச்சிய டி.எம்.சவுந்தரராஜன் சிலையை மதுரையில் திறந்து வைத்தேன். 24 வயதில் பாடத் துவங்கி, 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேல் திரைப்பாடல்கள், 2500 பக்திப் பாடல்களைப் பாடியவர். அவரது பக்திப் பாடல்கள் இன்று வரை தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் திருவிழாக்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தைவெளி வெளிவட்டச் சாலைப் பகுதிக்கு ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ எனப் பெயர் சூட்டினோம். காலத்தால் அழியாத பாடல்கள் பல பாடிய அவர் என்றென்றும் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுவார்.

பாடல் பாடி டிஎம்எஸ் மகன் முதல்வருக்கு பாராட்டு
டிஎம்எஸ் சிலை திறப்பு விழாவில், அவரது மகன் டி.எம்.எஸ்.பால்ராஜ், முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தார். அவர் பேசும்போது, ‘‘பல்லாயிரக்கணக்கான பாடல்களை டிஎம்எஸ் பாடியுள்ளார். இந்த மேடைக்கு பொருத்தமான அவரது பாடலை நான் பாடுகிறேன்’’ எனக்கூறி, ‘‘அச்சமென்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா..’’ என்ற பாடலை பாடினார். ‘‘டிஎம்எஸ் வாழ்ந்த சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என முதலமைச்சர் பெயர் சூட்டினார். இப்போது அவரது வெண்கலச் சிலையை திறந்து வைத்துள்ளார். எங்கள் குடும்பத்திற்கும், ரசிகப்பெருமக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. திராவிட மாடல் ஆட்சி நடத்திவரும் முதலமைச்சருக்கு அனைவரது சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்’’ என்றார்.

The post பிரபல பின்னணி பாடகர் டிஎம்எஸ் சிலை மதுரையில் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : TMS ,Opening ,Madurai ,CM G.K. Stalin ,Fishermen's Conference ,Ramanathapura ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...