×

அதிமுக மாநாட்டிற்கு தடை கோரி வழக்கு

மதுரை: அதிமுக மாநாடுக்கு தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிர்புறத்தில் ஆக. 20ல் அதிமுக சார்பில் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு போலீசார் அனுமதித்துள்ளனர். மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை சர்வதேச விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. விமான நிலையத்திற்கு தினசரி அதிகளவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. தரையிறங்கும்போது மிகவும் தாழ்வான பகுதியில் தான் விமானங்கள் பறக்கும்.

விமான நிலையத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். சுமார் 15 லட்சம் பேர் மாநாட்டிற்கு வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். அன்றைய தினம் விமானங்கள் தரையிறங்குவதில் இடையூறு ஏற்படக் கூடும். குறிப்பாக மாநாட்டில் பங்கேற்போர் பட்டாசுகள் வெடிக்கும் போது வானில் உயரத்திற்கு பறந்து வெடிக்கும் பட்டாசுகளால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பெருமளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும். இதுதொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் இல்லை.

மாநாட்டிற்கு அனுமதி கோரும் முன் மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. எனவே, ஆக. 20ல் பெருங்குடியில் அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும். மாநாடு நடத்த அனுமதிக்க கூடாது என சம்பந்தப்பட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

The post அதிமுக மாநாட்டிற்கு தடை கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK convention ,Madurai ,ICourt ,Sivagangai district ,Karaikudi Meenakshipuram ,AIADMK ,Dinakaran ,
× RELATED பணி ஒய்வு நாளில் பணிநீக்கம்.. மனவேதனையான விஷயம் : ஐகோர்ட் கிளை கருத்து!!