×

சிஏஜி சுட்டிக்காட்டிய 7 ஊழல்களுக்கு மோடிதான் பொறுப்பு: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) சுட்டிக்காட்டிய 7 ஊழல்களுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மத்திய தலைமை கணக்குத்தணிக்கையாளர் அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 7 திட்டங்களில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் நேற்று கூறியதாவது: மத்திய கணக்கு தணிக்கையாளரால் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். பாரத்மாலா திட்டத்தில் இருந்து முறைகேடுகள் தொடங்குகிறது. அங்கு கட்டுமானச் செலவு கிலோமீட்டருக்கு ரூ. 15.37 கோடியிலிருந்து இரட்டிப்பாகி, ஒரு கிலோமீட்டருக்கு ரூ.32 கோடிக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, டெண்டர் நடைமுறையில் குறைபாடு உள்ளது.

விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. எஸ்க்ரோ கணக்கில் இருந்து 3,500 கோடி ரூபாய் திருப்பி விடப்பட்டது. பாதுகாப்பு ஆலோசகர்கள் நியமிக்கப்படவில்லை. துவாரகா விரைவுச்சாலையில், இது போன்ற இரண்டாவது ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க செலவு ரூ. 18 கோடியில் இருந்து 250 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ரூ.500 கோடி ஒதுக்கியிருந்தால் ஒரு மங்கள்யான் விண்ணுக்கு போய் இருக்கும்.
நாட்டில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகள் தணிக்கை செய்யப்பட்டதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த நாட்டின் சாமானிய குடிமக்களிடம் ரூ. 132 கோடி கொள்ளையடித்துள்ளது.

அடுத்ததாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 7.5 லட்சம் பயனாளிகள் ஒரே தொலைபேசி எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சையின் போது இறந்த 88,000 நோயாளிகளின் பெயரில் புதிய உரிமைகோரல்கள் செய்யப்பட்டு பணம் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் யாருக்குச் சென்றது? அடுத்ததாக அயோத்தி மேம்பாட்டுத் திட்ட நிலம் மலிவு விலையில் வாங்கப்பட்டு, பின்னர் ராமர் கோவில் அறக்கட்டளைக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதை சிஏஜி சுட்டிக்காட்டியிருக்கிறது. இதனால் அயோத்தி மேம்பாட்டுத் திட்டமும் ஊழல்கள் நிறைந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுமான பணிக்கு பதிவு கூட செய்யாத காண்டிராக்டர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி அமைச் சகம் சார்பில் முதியவர்கள், ஏழைகள், விதவைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கும் பணியை செய்து வருகிறது. இதற்கு ஒதுக்கப்பட்ட பணம் 19 மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தை கொண்டாட விளம்பரப் பதாகைகளை வைக்க திசை திருப்பப்பட்டது. குறைபாடுள்ள என்ஜின் வடிவமைப்பிற்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ரூ.154 கோடி இழப்பீடு ஆகியுள்ளது.

இந்த ஊழல்கள் குறித்து பிரதமர் மோடியிடம் கேட்க எங்களுக்கு சில கேள்விகள் உள்ளன. உங்கள் தலைமையின் கீழ் சிஏஜி கண்டுபிடித்த ஊழல்கள் குறித்து உங்கள் மவுனத்தை உடைப்பீர்களா? பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியின் தலைவர் நீங்கள். செலவு இரட்டிப்பாகிய பாரத்மாலா திட்டத்தில் வாய் திறப்பீர்களா? இந்த மோசடிகளுக்கு பிரதமர் மோடி தெளிவாகப் பொறுப்பேற்க வேண்டும். தனது தலைமையில் கீழ் நடந்த இந்த மோசடிகள் குறித்து பிரதமர் மவுனம் கலைப்பாரா? ஊழல்களுக்கு காரணமானவர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா?. அவரது அரசில் நடந்த ஏழு ஊழல்களை சிஏஜி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ஒருவேளை இந்த அறிக்கைகளை தயாரிப்பவர்களை தேச விரோதிகள் என்று பிரதமர் அழைக்கலாம். அவர்களது வீட்டில் ரெய்டு நடத்தி சிறையில் அடைக்கக் கூடும். ஆனால் உண்மையில் அது இந்த 7 ஊழல்கள் ஒன்றிய அரசின் கஜானாவை கொள்ளையடிப்பது, இது இந்திய மக்களை கொள்ளையடிப்பது ஆகும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு முன், பிரதமர் இந்த நாட்டிற்கு இந்த ஊழல்கள் குறித்து சொல்ல வேண்டும், ஏழைகளுக்கான, உடல் ஊனமுற்றோருக்கான, வயதானவர்களுக்கான, விதவைகளுக்கான திட்டங்களில் தேவையற்றவர்கள் பலன் பெற ஏன் அனுமதித்தார்கள் என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post சிஏஜி சுட்டிக்காட்டிய 7 ஊழல்களுக்கு மோடிதான் பொறுப்பு: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,CAG ,Congress ,New Delhi ,Auditor General ,
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...