×

புதிய 10,000 சுய உதவி குழுக்களுக்கு ரூ15 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: புதிதாக 10 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் நடப்பாண்டில் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு சுழல் நிதி ரூ15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில், மாநில அளவிலான 3வது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை ஆகிய நான்கு துறைகளின் திட்டங்களை் ஆய்வு செய்கிறோம்.

* தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்புக்காக 2023-2024ம் ஆண்டில் புதியதாக 10 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு சுழல் நிதியாக வழங்க ரூ15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ75 கோடியும், 3 ஆயிரம் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு வறுமை நிலை குறைப்பு நிதியாக ரூ7.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கவும், ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க ரூ3.30 கோடி, 12,287 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் 388 வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் அலுவலக நிர்வாகிகளுக்கு ஆளுமை மற்றும் நிதிமேலாண்மை குறித்த புத்தாக்க பயிற்சி வழங்க ரூ24 கோடியே 96 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 2023-24ம் ஆண்டில் பண்ணை வாழ்வாதார நடவடிக்கை பணிகளுக்காக ரூ60.27 கோடியும், பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கை பணிகளுக்காக ரூ18.64 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 2022-2023ம் ஆண்டு சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க ரூ25 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதையும் தாண்டி 25 ஆயிரம் 642 கோடி ரூபாய், 4 லட்சத்து 49 ஆயிரத்து 209 சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கி அரசு சாதனை புரிந்துள்ளது.

* கடந்த 2 ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 47,034 கோடி ரூபாய் வழங்கி சாதனை புரிந்துள்ளோம்.

* 2023-2024ம் ஆண்டு வங்கி கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 30 ஆயிரம் கோடி ரூபாயில், 30.06.2023 வரை, சுய உதவிக்குழுக்களுக்கு ரூ5,644 கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மன் சத்துணவு திட்டத்தின் கீழ் 2022-23-ஆண்டில், 46 லட்சத்து 70 ஆயிரத்து 458 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க சூழலை ஊக்கப்படுத்துவதற்காகத் தணிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டங்களை சிறிதும் தாமதமின்றி செயல்படுத்தி, திட்டங்களின் பயன் முழுமையாக மக்களை சென்றடைய துறை தலைவர்களும், அரசு அலுவலர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post புதிய 10,000 சுய உதவி குழுக்களுக்கு ரூ15 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M K Stalin ,CHENNAI ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான...