×

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் உள்ளார்களா? மறுக்கிறது இலங்கை அரசு

கொழும்பு: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் இருப்பதாக வெளியான செய்திக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. இலங்கை உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி, மகள், மகன் மற்றும் அவரது உறவினர்கள் உயிரிழந்ததாகவும் இலங்கை அரசு அறிவித்தது. இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பெண் சமூக ஊடகங்களின் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்,’ இலங்கை போரில் எனது தங்கை மதிவதனி, அவரது மகள் துவாரகா மற்றும் உறவினர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால் அவர்கள் உயிருடன் இருப்பதாக அறிந்துகொண்டேன். அவர்களை நேரில் சந்தித்து உரையாடி அவர்களுடன் உணவருந்தி விட்டு வந்துள்ளேன். இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். உண்மையில் இந்தச் செய்தியை கடவுள் கொடுத்த கொடையாகவே நினைக்கின்றேன் ‘ என கூறி உள்ளார். ஆனால்,’பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் உள்ளதாக வெளியான செய்தி போலியானது’ என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் நலின் ஹேரத் தற்போது தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில்,’ இது ஒரு நாடகம். தன் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள். இது ஒரு நகைச்சுவையான விஷயம்’ என கூறி உள்ளார்.

The post விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் உள்ளார்களா? மறுக்கிறது இலங்கை அரசு appeared first on Dinakaran.

Tags : LTTE ,Prabhakaran ,Sri Lankan government ,Colombo ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!