×

பெரியாறு அணையில் 2வது சுரங்கப்பாதை இரு மாநிலங்களின் பிரச்னை என்பதால் உச்சநீதிமன்றத்தில் நிவாரணம் பெறலாம்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல்

மதுரை: பெரியாறு அணையில் 2வது சுரங்கப்பாதை அமைக்கக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, இரு மாநில பிரச்னை என்பதால் உச்சநீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியுள்ளது. மதுரை, சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெரியாறு அணை தொடர்பான வழக்கில், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம். அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பிறகு, அணையின் முழு கொள்ளளவான 152 அடி வரை தண்ணீரை தேக்கலாம் என கடந்த 2014ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பிறகு, பெரியாறு அணையில் 142 அடி வரை, தண்ணீர் தேக்கப்பட்டு, அதற்கு மேல் வரும் நீரை 13 ஷட்டர்கள் வழியாக கேரளாவில் உள்ள கடல் பகுதிக்கு திறக்கப்பட்டு வீணாகி வருகிறது.

தமிழகத்திற்கு தேக்கடி பகுதி ஷட்டரில் இருந்து சுரங்கப்பாதை வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2,500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும். இதைவிட அதிகமாக தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. எனவே, பெரியாறு அணையில் மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து, தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டால், 142 அடிக்கும் மேல் வரும் தண்ணீரை, கேரள பகுதிக்கு வீணாக வெளியேற்ற தேவையில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள லோயர்கேம்பில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை விவசாயம், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது. எனவே, பெரியாறு அணையில் 2வது சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இதேபோல் மேலும் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களின் மீது நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அணையின் பாதுகாப்பு மற்றும் பலப்படுத்தல் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் ஒன்றிய நீர்வள ஆணையத்தை அணுகலாம் என்றும் கூறியுள்ளது. கண்காணிப்பு குழுவும் அமைத்து உத்தரவிட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னை என்பதால் இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, பெரியாறு அணை தொடர்பாக ஏதேனும் பிரச்னை இருந்தால் அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறலாம்’’ எனக்கூறி இந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

The post பெரியாறு அணையில் 2வது சுரங்கப்பாதை இரு மாநிலங்களின் பிரச்னை என்பதால் உச்சநீதிமன்றத்தில் நிவாரணம் பெறலாம்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Periyar Dam ,Supreme Court ,ICourt Branch ,Madurai ,IC Court branch ,IC Court ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...