
சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுபணிகளில் அடங்கிய, தட்டச்சர் பணி நியமனத்துக்கான சான்று சரிபார்ப்பு 21ம் தேதி சென்னையில் நடக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-4 பணிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு நேரடி நியமனம் செய்ய டிஎன்பிஎஸ்சி, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக 2022ல் ஜூலை மாதம் 24ம் தேதி எழுத்துத் தேர்வு நடந்தது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் 2023 மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. மேற்கண்ட தட்டச்சர் பணிக்கான சான்று சரிபார்ப்பு கவுன்சலிங் இம்மாதம் 21ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது.
இந்த கவுன்சலிங் தொடர்பான அனைத்து விவரங்கள், தரவரிசைப் பட்டியல்கள், இட ஒதுக்கீடு விதிகள், காலிப்பணியிடங்கள் அடிப்படையில் தற்காலிக தெரிவுப் பட்டியல்கள் டிஎன்பிஎஸ்சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்று சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங் நடக்கும் நாள், நேரம், மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ளவர்களுக்கான விவரம் எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. கவுன்சலிங்கில் கலந்து கொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தட்டச்சர் பணி நியமனத்துக்கு சான்று சரிபார்ப்பு: 21ம் தேதி துவங்குவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.