×

மாநில உரிமைகளுக்கு எதிரானது நீட் தேர்வு: ஆளுநருக்கு டாக்டர்கள் சங்கம் பதிலடி

சென்னை: நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரானது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீட் தொடர்பாக , மாணவி ஒருவரின் தந்தை எழுப்பிய கேள்விக்கு , ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பதில் விவாதப்பொருளாகியுள்ளது. `முடிவெடுக்கக் கூடிய இடத்தில் நான் இருந்தால் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்கமாட்டேன்’ என அவர் கூறியுள்ளார். இது அரசியல் சட்டத்திற்கும், மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.

ஆளுநர் கூறுவதுபோல், மருத்துவக் கல்வி வணிகத்தை நீட் தடுத்திடவில்லை. உண்மையில் நீட்டிற்கும் மருத்துவக் கல்வி வணிகத்திற்கும் தொடர்பில்லை. நீட் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கான ஒரு போட்டித்தேர்வு மட்டுமே. மருத்துவக் கல்வி வணிகமயமாவதற்கு அரசின் தனியார் மயமாக்கல் மற்றும் வணிக மயமாக்கல் கொள்கைகள்தான் காரணம். நியாயமான கட்டண நிர்ணயம், அதை கறாராக நடைமுறைப் படுத்துதல், கட்டாய நன்கொடையை தடுத்தல், அரசு மருத்துவக் கல்லூரிகளை அதிகப்படுத்துதல் போன்றவையே மருத்துவக் கல்வி வணிகமாவதை தடுக்கும். ஆளுநர் கூறுவது போல், `மருத்துவக் கல்வியில் நடைபெற்ற ரூபாய் 1000 கோடி வணிகத்தை’ நீட் தடுத்துவிட வில்லை.

மாறாக ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கை மருத்துவக் கல்வி வணிகத்தை தற்போது பல ஆயிரம் கோடியாக அதிகரிக்கவே காரணமாயுள்ளது. நீட் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் களுக்கும்,கிராமப்புற மாணவர்களுக்கும், தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், முதல்தலை முறை மாணவர்களுக்கும், ஏழை- எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிராக அமைந்தது. நீட் இல்லை எனில் ,தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவாற்றல் முடங்கி விடும் என ஆளுநர் கூறுவது, அறிவுத்தோற்றவியல் மற்றும் அறிவின் இயங்கியலுக்கு எதிரானது. நீட் இல்லாத பொழுது உருவாக்கப்பட்ட மருத்துவர்களும் திறமை மிக்கவர்களாகவே இருந்துள்ளனர் என்பதே வரலாறு.

The post மாநில உரிமைகளுக்கு எதிரானது நீட் தேர்வு: ஆளுநருக்கு டாக்டர்கள் சங்கம் பதிலடி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Doctors Association for Social Equality ,NEET ,
× RELATED மே 5ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு