ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்பட்ட கரும்பில் புதியதாக வெள்ளை வேர் புழுக்கள் தாக்கி சேதப்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொக்க போயன் எனும் நோய் தாக்குதல் காரணமாக கரும்பு வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது புதியதாக வெள்ளை வேர் புழுக்கள் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ) முருகேசன் கூறியதாவது: கரும்பில் வெள்ளை வேர் புழுக்கள் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பூச்சியின் தாய் வண்டு, அடர் பழுப்பு நிறுத்தில் இருக்கும். கோடை மழை பெய்ததும், மண்ணில் இருக்கும் கூட்டு புழுக்களில் இருந்து வெளிவந்து, கரும்பின் தூர் பகுதியில் முட்டையிடும். ஒரு தாய் வண்டு, 30 முட்டையிடும். இதில், வெளிவரும் புழுக்கள் வேரை கடித்து சேதப்படுத்தும். வளர்ந்து பழுக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில், சதை பற்றுடன் பிறை நிலவு வடிவில் காணப்படும்.
இவற்றின் தாக்கத்தால் கரும்பு வாடி, வதங்கி காய்ந்து விடுமக. இப்புழு பருவம், 2 மாதமாகும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும். இவை வேம்பு, முருங்கை, கருவேல் மரங்களில் கூட்டமாக அமர்ந்து ஓய்வெடுத்து, கரும்பை தாக்கும். மேலும் வேம்பு, முருங்கை, கருவேல் மரங்களில் கூட்டமாக காணப்படும் வண்டுகளை, கிளைகளை உலுக்கி கீழே விழச் செய்து, அவற்றை சேகரித்து தீயிட்டு அழிக்க வேண்டும். காய்ந்த தூருக்கு அடியில் உள்ள புழுவை கையால், சேகரித்து அழிக்க வேண்டும். அல்லது வேளாண்துறை பரிந்துரைக்கும் மருந்துகளை உரிய முறையில் பயன்படுத்தி கட்டுக்குள் கொண்டு வர முடியும். எனவே, அந்தந்த வட்டார வேளாண் அலுவலகங்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு இணை இயக்குநர் (பொ) முருகேசன் கூறினார்.
The post கரும்பில் புதியதாக வெள்ளை வேர் புழுக்கள் தாக்கம்: வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.