
- வடசேரி பேருந்து நிலையம் ச.
- GP
- நாகர்கோவில்
- வடசேரி பேருந்து நிலையம்
- ஸ்வா
- வடசேரி பேருந்து நிலையம் எஸ் ஜி.
நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று இரவு எஸ்.பி. திடீரென ஆய்வு செய்தார். பஸ் நிலையத்துக்குள் பைக், கார்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். அத்துமீறி நுழையும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். குமரி மாவட்டத்தில் மிக முக்கிய பஸ் நிலையமாக வடசேரி பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அரசு பஸ்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். சமீப காலமாக பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. .
காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் செல்போன்கள், பணம், நகைகள் திருடப்படுகின்றன. இதே போல் குடிபோதையில் இருப்பவர்களை குறி வைத்தும் ஒரு கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில், 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு, ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பஸ் நிலையத்திலேயே மட்டையாகி விடுகிறார்கள்.
இவ்வாறு போதையில் மயங்கி கிடப்பவர்களிடம் இருந்து செல்போன்கள், வாட்ச், பணம் உள்ளிட்டவற்றை ஒரு கும்பல் தொடர்ச்சியாக திருடி வருகிறது. தங்க நகைகள் அணிந்திருந்தால் அதையும் அலாக்காக அபேஸ் செய்து விட்டு சென்று விடுகிறார்கள். மேலும் ரவுடிகள், விபசார கும்பல்களின் நடமாட்டமும் உள்ளது. சமீபத்தில் வடசேரி பஸ் நிலையத்தில் குழந்தை கடத்தல் சம்பவமும் அரங்கேறியது. பஸ் நிலையத்தில் நடக்கும் குற்ற செயல்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்தன. இந்த நிலையில், நேற்று இரவு எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் திடீரென வடசேரி பஸ் நிலையத்தில் அதிடிப்படையினருடன் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலைய பிளாட்பாரத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். பிளாட்பார கடைக்காரர்களிடமும் விசாரித்தார். சந்தேகப்படும் படியான நபர்கள் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு வியாபாரிகளை எஸ்.பி. கேட்டுக் கொண்டார்.
பஸ்கள் நுழைவு பகுதி, வெளியேறும் பகுதிகளையும் எஸ்.பி. ஆய்வு செய்தார். எஸ்.பி. தலைமையில் அதிரடிப்படையினர் பஸ் நிலையத்துக்குள் நுழைந்ததும் பஸ் நிலையத்தில் பயணிகளுடன் அமர்ந்திருந்த வாலிபர்கள் சிலர் ஓட்டம் பிடித்தனர். குறிப்பாக கன்னியாகுமரி பஸ்கள் நிற்கும் பகுதியில் இளம்பெண்கள், பயணிகள் அதிகம் பேர் நின்றனர். எஸ்.பி. அந்த பகுதிக்கு வருவதை பார்த்த வாலிபர்கள் சிலர் தலைக்கேறிக்க ஓடியதை காண முடிந்தது. இவர்கள் திருட்டு அல்லது ரவுடி கும்பல்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பயணிகள் கூறினர். எஸ்.பி. ஆய்வு செய்து கொண்டிருந்த போதே பஸ் நிலையத்துக்குள் வாலிபர்கள் சிலர் பைக்கில் வலம் வந்தனர். இதை பார்த்ததும் எஸ்.பி., அதிர்ச்சி அடைந்தார்.
பஸ் நிலையத்துக்குள் பைக், கார், ஆட்டோக்கள் என எந்த வாகனமும் வர கூடாது. பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் உள்ள போலீசார் அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். பஸ் நிலையத்துக்குள் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். வயதானவர்கள், மாற்று திறனாளிகளை அழைத்து வருபவர்கள் மட்டும், ஆட்டோக்களில் வரலாம். மற்றபடி வேறு எந்த வாகனம் நுழைந்தாலும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று எஸ்.பி. உத்தரவிட்டார். வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
* இரவு 10 மணிக்கு மேல் இளசுகள் கூட்டம்
வடசேரி பஸ் நிலையத்தில் இரவு 10 மணிக்கு பின், நள்ளிரவு 12 மணி வரை இளம் வயதினர் கும்பல், கும்பலாக பைக்குகளில் வருகிறார்கள். இவர்கள் வடசேரி முதல் பார்வதிபுரம் வரை பைக் ரேஸ் நடத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே இரவு நேர ரோந்து பணி போலீசார் பஸ் நிலையத்துக்குள் நள்ளிரவில் சுற்றி திரிபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post ரவுடிகள், திருட்டு கும்பல் ஓட்டம் வடசேரி பஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு: பைக், கார்கள் நுழைய தடை appeared first on Dinakaran.