×

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் 9,423 தீர்ப்புகள் 14 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு: இந்தி மொழிக்கு அடுத்த இடத்தில் தமிழ் உள்ளது

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டின் 9,423 தீர்ப்புகள் 14 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘உச்ச நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு மொழி பெயர்ப்புத் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை, பொதுமக்கள் தங்களது மொழிகளில் எளிதாக படித்து புரிந்து கொள்ள முடியும்.

இந்தத் திட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமையும். அனைத்து பிராந்திய மொழிகளிலும் நீதிமன்ற தீர்ப்புகளை வழங்குவதே நீதிமன்றத்தின் நோக்கமாக உள்ளது. நீதிமன்றத்தின் மூலம் பிராந்திய மொழி வடிவில் தீர்ப்புகள் கிடைக்காத சூழல் ஏற்படும் போது, பிராந்திய மொழிகளில் வாதாடலாம் என்று சொல்வதால் யாருக்கு என்ன பயன் ஏற்படபோகிறது. பொதுவாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கில மொழியில் வழங்கப்படும். இத்திட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை 14 பிராந்திய மொழிகளில் 9,423 தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டன.

அதாவது ஆங்கிலத்தில் இருந்து 14 மொழிகளில் அவை மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான தீர்ப்புகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டனது. அதாவது 8,977 தீர்ப்புகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து தமிழில் 128 தீர்ப்புகள், குஜராத்தியில் 86 தீர்ப்புகள், மலையாளம் மற்றும் ஒடியா மொழியில் தலா 50 தீர்ப்புகள், தெலுங்கில் 33 தீர்ப்புகள், பெங்காலியில் 31 தீர்ப்புகள், கன்னடத்தில் 24 தீர்ப்புகள், மராத்தியில் 20 தீர்ப்புகள், பஞ்சாபியில் 11 தீர்ப்புகள், அசாமியில் நான்கு தீர்ப்புகள், உருதுவில் மூன்று தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன’ என்றார்.

* சுப்ரீம் கோர்ட்டை விரிவாக்க திட்டம் தயார்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மேலும் பேசுகையில், ‘உச்ச நீதிமன்றத்தில் தற்போது 17 நீதிமன்ற அறைகள், இரண்டு பதிவாளர் அறைகள் உள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 32 ஆக உள்ளது. பொதுமக்கள் நீதிமன்றங்களை எளிதில் அணுகக்கூடிய வகையில், நீதிமன்ற உள்கட்டமைப்பை மாற்றியமைப்பது அவசியம். அதற்காக வகுக்கப்பட்ட புதிய திட்டத்தின்படி, நீதித்துறை உள்கட்டமைப்பை நவீனமயமாக்க வேண்டும். குறிப்பாக 27 கூடுதல் நீதிமன்றங்கள், 51 நீதிபதிகள் அறைகள், 4 பதிவாளர் நீதிமன்ற அறைகள், 16 பதிவாளர் அறைகள், வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களுக்கான அறைகளை அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தை விரிவாக்கம் செய்யும் பணியை இரண்டு கட்டங்களாக செய்ய திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது’ என்றார்.

The post உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் 9,423 தீர்ப்புகள் 14 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு: இந்தி மொழிக்கு அடுத்த இடத்தில் தமிழ் உள்ளது appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Chief Justice ,TY Chandrachud ,Supreme Court… ,
× RELATED அதானி நிலக்கரி ஊழல் குறித்து விரைவாக...