×

இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்தனர்; ராமேஸ்வரம், குமரி, திருச்சியில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், குமரி, திருச்சியில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று விரதமிருந்து முன்னோர்களை வழிபடுவது வழக்கம். ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை பிரசித்தி பெற்றதாகும். இந்த அமாவாசை தினங்களில் நீர்நிலைகளில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை.

இந்நிலையில் இந்தாண்டு ஆடி மாதம் 2 அமாவாசை வந்துள்ளது. முதல் அமாவாசை ஆடி முதல் தேதியில் வந்தது. அன்றைய தினம் மக்கள் நீர்நிலைகளில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இன்று 2வது அமாவாசை வந்துள்ளது. தமிழ் பஞ்சாங்கத்தில் 2 நாட்களிலுமே வரக்கூடிய அமாவாசை சர்வ அமாவாசை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இரண்டு அமாவாசை நாட்களிலும் பித்ரு தர்ப்பணம் தரலாம். அதன்படி ஆடி 2வது அமாவாசையான இன்று ஏராளமானோர் நீர்நிலைகளில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக்கடலில் இன்று காலை ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதையடுத்து ராமநாத சுவாமிகோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அம்பாளை வழிபட்டனர். வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்களின் வாகனங்கள் ஊருக்குள் வந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று அதிகாலையில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர். 10 முதல் 30க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர். முன்னோர்களை நினைத்து, அவர்களின் ஆசி வேண்டி வழிபட்டனர். படித்துறை அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு மற்றும் தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டபம் படித்துறையில் ஏராளமானோர் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். நாகை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காவிரி கரைகளில் மக்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று இரவு முதலே ஏராளமானோர் திரண்டனர். இன்று அதிகாலையில் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். முன்னதாக கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணியளவில் வடக்கு பிரதான நுழைவுவாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதே போல் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் பலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.

* சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என 8 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்தாண்டு ஆடி மாத பிரதோஷம், அமாவாசை பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி முதல் நாளை வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசை நாளான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். அதிகாலை 3.35 மணி அளவில் கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தாணிப்பாறை சாலையின் இருபுறங்களில் உள்ள தோட்டங்களில் பக்தர்கள் தங்கி முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

The post இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்தனர்; ராமேஸ்வரம், குமரி, திருச்சியில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் appeared first on Dinakaran.

Tags : Adi ,Rameswaram ,Kumari ,Trichy ,Aadi Amavasai ,Aadi ,
× RELATED அரசு பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு...