×

என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்! உத்வேகம் அளிக்கும் விஞ்ஞானி வீரமுத்துவேல்

ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆராய்வதற்காக விண்ணில் ஏவிய சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 ஆகிய செயற்கைக்கோள்களின் வெற்றியின் அடிப்படையில், அடுத்தகட்டமாக கடந்த ஜூலை 14 அன்று மதியம் 2:35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பிரமாண்டமான முயற்சியின் தொடக்கப்புள்ளியாக சந்திரயான்-3 விண்ணில் சீறிப் பாய்ந்தது. சந்திரயான்-2 ஏவப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சந்திரயான்-3 ஆந்திரப் பிரதேசத்தின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் மார்க் III (ஜிஎஸ்எல்வி-எம்கே III) ஹெவி-லிஃப்ட் ராக்கெட்டின் பின்புறத்தில் உள்ளது.

2019ம் ஆண்டில், சந்திரயான்-2, சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை வெற்றிகரமாக நிலைநிறுத்தியபோது உலகின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் பணி ஓரளவு பின்னடைவைச் சந்தித்தது. சந்திரயான்-2ல் இருந்த விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்றபோது நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து ஏற்பட்டபோதிலும், இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இருந்தது. இந்த சாதனையின் தொடர்ச்சியாக இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் 3 செயற்கைக்கோள் திட்டத்தை உருவாக்கி அதற்குத் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமுத்துவேலை திட்ட இயக்குநராகத் தேர்வு செய்தபோது அவர் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அறிவுரை கூறி வெளியிட்ட வீடியோ சமீபத்தில் வைரல் ஆனது. அதில் அவர் ‘‘இந்த வாய்ப்பு கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை சாருக்கு நன்றி. இஸ்ரோவின் பெங்களூருவில் உள்ள யு ஆர் ராவ் சாட்லைட் செண்டரில் சயிண்டிஸ்ட் இன்ஜினியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் விழுப்புரத்தில். பள்ளிப்படிப்பை ஒரு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிப்படிப்பில் நான் ஒரு சராசரி மாணவன்தான். அடுத்து என்ன படிக்கணும் எங்கு படிக்கணும் என்ற திட்டமே இல்லை. என்னுடைய குடும்பத்தில் பெற்றோருக்கு கல்வியில் பெரிய பின்புலம் ஏதும் கிடையாது. நண்பர்களுடன் சேர்ந்து டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தேன். படிக்கும்போது இன்ஜினியரிங்கில் ஆர்வம் ஏற்பட்டு 90 சதவீத மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. மெரிட்டில் சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. சேர்ந்தேன்.

எல்லா செமஸ்டர் தேர்விலும் முதல் அல்லது இரண்டாம் இடம் பிடிப்பேன். இப்படி முதல் அல்லது இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெறுவதற்காக எப்போதும் படித்துக்கொண்டு இருக்க மாட்டேன். படிக்கும்போது நன்றாகப் புரிந்து முழு ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் எனக்கு நல்ல மதிப்பெண்களை வாங்கி கொடுத்தது. எம்.இ. படிப்பில் திருச்சியில் ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்தேன். எம்.இ.படிக்கும்போதும் முதல் அல்லது இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றேன். அதன் பின்னர் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் கோயம்புத்தூரில் உள்ள லட்சுமி மெஷின் ஒர்க்ஸ்ஸில் சீனியர் இன்ஜினியராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தபோதும் ஏரோ ஸ்பேஸ் ரிசர்ச் மீது எனக்கு பெரிய ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அப்போதுதான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் பெங்களூருவில் ஹெலிகாப்டர் டிவிஷன் என்று சொல்லக்கூடிய ரோட்டரி விங் ரிசர்ச் அண்ட் டிசைன் செண்டரில் டிசைன் இன்ஜினியராக சேர்ந்தேன். அதன்பின் என் கனவாக இருந்த இஸ்ரோ சாட்டிலைட் செண்டரில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு முதலில் ப்ராஜெக்ட் இன்ஜினியராகவும், ப்ராஜெக்ட் மேனேஜராக நிறைய ரிமோட் சென்சிங் அண்ட் சயிண்டிபிக் சாட்லைட்ஸ்சில் பணியாற்றியுள்ளேன்.

இந்த பணிகளுக்கு இடையே எனது ஆராய்ச்சியை நான் விடவில்லை. அதன் வெளிப்பாடாக பி.எச்டி படிக்க ஐஐடி சென்னையில் சேர்ந்தேன்.நோவல் ரிசர்ச் என்று சொல்லப்படும் வைப்ரேஷன் செப்பரேஷன் ஆப் எலக்ட்ரானிக் பேக்கேஜ் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்தேன். நிறைய இண்டர்நேஷனல் கான்ப்ரன்ஸ்சில் சமர்ப்பித்துள்ளேன். வெற்றிகரமாக பி.எச்டியையும் முடித்தேன். இஸ்ரோவின் முதல் நேனோ சாட்லைட் டீமை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை 3 நேனோ சாட்லைட் லான்ச் பண்ணியுள்ளோம். அசோசியேட் பிராஜெக்ட் டைரக்டராக சந்திரயான் 2வை வெற்றிகரமாக முடித்தோம். பிராஜெக்ட் டைரக்டராக சந்திராயன் 3ஐ செயல்படுத்த இஸ்ரோ ஹையர் மேனேஜ்மெண்ட் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. இஸ்ரோவுக்கு இது ஒரு பெரிய திட்டம். இதில் ஒரு பெரிய குழுவை நான் வழிநடத்திக்கொண்டு இருக்கிறேன். நான் ஒரு சாதாரண ஆள். என்னால் இந்த அளவுக்கு வர முடியுமென்றால் எல்லாராலும் முடியும். வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கும் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சுய ஒழுக்கம், நூறு சதவீதம் ஈடுபாடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடின உழைப்புடன் செயல்பட்டால் அனைவருக்குமே வெற்றி நிச்சயம்.’’ என்று இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக தான் கடந்து வந்த வெற்றிகரமான சாதனைப் பயணத்தை பகிர்ந்திருந்தார்

The post என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்! உத்வேகம் அளிக்கும் விஞ்ஞானி வீரமுத்துவேல் appeared first on Dinakaran.

Tags : Veeramuthuvel ,India ,ISRO ,Harigotta, ,AP State ,Aviya ,Chandrayaan- ,Veeramuthuel ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை