×

இடவலத்துக் கக்காட்டு ஜானகி அம்மாள் : சிறந்த தாவரவியல் விஞ்ஞானி

(1897 நவ. 4 – 1984 பிப். 7)

இடவலத்துக் கக்காட்டு ஜானகி அம்மாள் (Janaki Ammal Edavalath Kakkat) உயிர்க்கல மரபியலிலும் தொகுதிப் புவியியலிலும் ஆராய்ச்சி நடத்திய ஓர் இந்தியத் தாவரவியல் வல்லுநர் ஆவார். இவர் 1897ல் கேரளத்திலுள்ள தலைசேரியில் பிறந்தார். அவரது தந்தை திவான் பகதூர் இடவலத்து கக்காட்டு கிருஷ்ணன் சென்னை மாகாணத்தின் துணை நடுவராகப் பணியாற்றியவர். அவருக்கு ஆறு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் இருந்தனர். அவரது குடும்பத்தில், பெண்கள் கல்வியிலும், நுண்கலைகளிலும் படிப்பைத் தொடர ஊக்கப்படுத்தப்பட்டனர். ஆனால் ஜானகி அம்மாள் தாவரவியல் படிப்பைத் தேர்வுசெய்தார். தலைச்சேரியில் பள்ளி படிப்பை முடித்த ஜானகி அம்மாள் சென்னைக்குச் சென்று அங்கு குயின் மேரிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், 1921ல் சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரவியலில் ஹானர்ஸ்(கவுரவப்) பட்டமும் பெற்றார். மாநிலக் கல்லூரி ஆசிரியர்களின் தாக்கத்தால் ஜானகி அம்மாளுக்கு உயிர்க்கல மரபியலில் ஆர்வம் ஏற்பட்டது.

தமிழகத்தின் கோயம்புத்தூரில் இந்திய கரும்பு ரகங்களை ஆராய கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இடவலத்து கக்காட்டு ஜானகி அம்மாள் இந்திய கரும்பினங்களின் இனிப்புச் சுவை, பிழிதிறனை அதிகரிப்பதற்கான பல முறைகளை உருவாக்கினார். சிறந்த தாவரவியல் விஞ்ஞானியான இவர், உயிர்க்கல மரபியல் (Cytogenetics), தொகுதிப் புவியியல் (Phytogeography) துறைகளில் முன்னோடியாவார்.

கோவையில் ‘சச்சாரம் ஸ்பான்டேனியம்’என்ற (Saccharum spontaneum) காட்டினக் கரும்பு ரகத்தின் மரபியலை ஆராய்ந்த ஜானகி அம்மாள் அதன் விளைவாக, அங்கு பல உள்நாட்டுக் கலப்பு மரபினக் கரும்பு ரகங்களை உருவாக்கினார். கரும்பு சார்ந்த உயிர்க்கலவியல் ஆய்வுகளில், கரும்பில் பல சிறப்பினக் கலப்பு, மரபினக்கலப்பு வகைகளை, கரும்பையும் அதைச் சார்ந்த புல்லினங்களையும் மூங்கில் போன்ற புல் பேரினங்களையும் இணைத்து உருவாக்க வழிவகுத்தது ஜானகியின் ஆராய்ச்சி.

இந்திய தாவரவியல் அளக்கை அமைப்பின் (Botanical Survey of India- BSI) சிறப்பு அலுவலராக 1952ல் பொறுப்பேற்றதோடு, பிஎஸ்ஐ நான்கு பிராந்திய மையங்களில் இயங்கும் வகையில் ஒழுங்குபடுத்தினார். கோவை (1955), புனா (1955) ஷில்லாங் (1955), டேராடூன் (1956) ஆகிய மையங்களிலும் கொல்கத்தாவில் தலைமையகமும் கொண்டதாக பிஎஸ்ஐ மேம்படுத்தப்பட்டது.ஓய்வுக்காலத்தில் மூலிகைத் தாவரங்கள் குறித்த ஆய்வுகளிலும் (Ethnobotany) இவர் ஈடுபட்டார். கேரள மலைக்காடுகளிலுள்ள அரிய மூலிகைகளின் மாதிரிகள் சேகரித்த ஜானகி அம்மாள் அவற்றை முறைப்படி பட்டியலிட்டார். ஜானகி அம்மாள் 1935ல் இந்திய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் 1957ல் இந்திய தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு 1956ல் மிச்சிகன் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது. இந்திய அரசு 1977ல் இவருக்குப் பத்ம பட்டம் வழங்கியது. உயிரியல் வகைப்பாட்டியலில் சிறந்த ஆய்வு மாணவர்களை உருவாக்கும் நோக்கில், மத்திய வனத்துறை அமைச்சகம் சார்பில் இ.கே.ஜானகி அம்மாள் தேசிய விருது 1999 முதல் விலங்கியல், தாவரவியல் பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
– சக்திவேல்

The post இடவலத்துக் கக்காட்டு ஜானகி அம்மாள் : சிறந்த தாவரவியல் விஞ்ஞானி appeared first on Dinakaran.

Tags : pol kakkari janaki ,Kakaki Janaki ,Janaki Ammal Edavalath Kakkat ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...