×

நோய்க்கு மருந்தாகும் ஈசன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சேர நாட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது வண்டி. அந்த வண்டியின் முன்னே இரண்டு காளை மாடுகள் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் மலை போல வளர்ந்திருந்தது. ஆகவே, வெகு சுலபமாக அந்த வண்டியை அவை இழுத்துக்கொண்டு, சாலையில் வேகமாக ஓடின. அந்த வண்டியின்முன்னே அமர்ந்து கொண்டு, ‘‘டுச் டுச் எய்…” என்று அந்த காளைமாடுகளின் ஓட்டத்தையும் வேகத்தையும் முறைப் படுத்திக் கொண்டிருந்தான் அந்த மனிதன். வண்டி முழுவதும் பல மூட்டைகள், முறையாக ஒன்றன் மேலே மற்றொன்றாக அடுக்கப்பட்டிருந்தன. அனைத்தும் இறுகக் கட்டப்பட்டிருந்தன. உள்ளே இருக்கும் பொருள் கீழே விழாதபடி தைக்கப்பட்டிருந்தது.

சூரியன் அஸ்தமித்து இரண்டு நாழிகை ஆகிவிட்டதால், வழியில் நிலவொளியைத் தவிர வேறு எதுவும் இல்லை. வண்டியின் ஒரு ஓரத்தில் கண்ணாடிக் கூம்பின் உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கு மிகவும் மந்தமாக ஒளி பரப்பிக்கொண்டிருந்து. காடுகளையும் மலைகளையும் கடந்து சேர நாட்டை அடைய வேண்டும். வழியில் கொள்ளையர்கள் பயம் உள்ளது. போதாத குறைக்கு துஷ்ட மிருகங்களும் அதிகம் இருக்கும். இதை எல்லாம் யோசித்து பார்த்த, வண்டிக்காரனின் உடல் லேசாக பயத்தில் நடுங்கியது.

அவனையும் அறியாமல் அவனது உடல் வியர்க்க ஆரம்பித்தது. நிலவொளியின் குளுமையும், பைய வீசும் குளிர்தென்றல் காற்றையும் தாண்டி அவனது உடல் தொப்பலாக நனைந்தது. தனது அங்க வஸ்திரத்தை எடுத்து முகம் துடைத்துக் கொண்டான். பிறகு பய மேலீட்டினால், வானத்தைப் பார்த்து கை குவித்து, “ஈஸ்வரா! எனக்கு நீதான் துணை’’ என்று அந்த சிவப் பரம்பொருளைத் தஞ்சம் புகுந்தான்.

அப்போது, “நில் மகனே’’ என்று ஒரு குரல் கேட்டது. குரலைக் கேட்ட அடுத்த நொடி, காளைகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து வண்டியை நிறுத்தி, சத்தம் வந்த திக்கை நோக்கினான். அங்கே ஒரு தொண்டுக் கிழவர், முழு நீள வெள்ளைத் தாடியும், ஒற்றை நாடி சரீரத்தோடும், நெற்றியில் பளீர் வெண்ணீற்றோடும், கையில் ஊன்றுகோலோடும், நின்று கொண்டிருந்தார். கண்களில் ஒரு ஆழமான தீட்சண்யம் தெரிந்தது. கழுத்தில் சாரைசாரையாக ருத்ராட்ச மாலை தொங்கிக் கொண்டிருந்தது. அவரைக் கண்களால் அளந்தபடியே “என்ன தாத்தா!’’ என்று கேட்டான். அவர் அதற்கு மெல்ல நகைத்தார்.

“வண்டியில் என்ன இருக்கிறது மகனே’’ என்று தன் தள்ளாடும் குரலில் கேட்டார் அவர். அவர் அப்படி கேட்கவும், அந்த வண்டிக்காரனுக்கு பயமாகிவிட்டது. ஏதோ வழிப்பறிக் கொள்ளையன்தான், வேடம் தாங்கி வந்திருக்கிறான் என்று எண்ணி பயந்தான். வண்டியில் மூட்டை மூட்டையாக மிளகு இருக்கிறது என்று சொன்னால், அடுத்த நொடி அவன் அனைத்தையும் களவாடி விடுவானோ என்று அவனுக்குத் தோன்றியது.

(அந்த காலத்தில் மிளகு மிகவும் விலை உயர்ந்த ஒரு பொருளாக இருந்தது). இந்த முதியவர், நம்மை அடித்து உதைத்து, பொருளை நம்மிடம் இருந்து களவாட சக்தி இல்லாதவராக இருக்கலாம். ஆனால், இவரது கூட்டாளிகள், அருகில் மறைந்திருப்பார்கள். இவர் ஒரே ஒரு சமிக்ஞை செய்தால் போதும், அவர்கள் நம்மைச் சுற்றி வளைத்து விடுவார்கள். விலை மதிப்பற்ற மிளகு நமது வண்டியில் இருப்பது தெரிந்தால், அனைத்தையும் பறித்துக் கொள்வார்கள் என்று பயந்தான் அவன். நல்ல வேளை, நடக்கப்போவதை முன் கூட்டியே ஊகிக்க, கடவுள் நமக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார், இல்லை என்றால் என்ன ஆகி இருக்கும் என்று நினைத்தபடி வண்டிக்காரன் மெல்ல பெருமூச்சுவிட்டான்.

“வண்டியில் ஒன்றுமில்லை பெரியவரே! வெறும் பயறுதான் இருக்கிறது’’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, தைரியமாக ஒரு பொய்யைச் சொன்னான் அந்த வண்டிக்காரன். அவன் சொன்னதைக் கேட்டு மெல்ல இளநகை பூத்தார், அந்த முதியவர். “சரி! வண்டியில் இருக்கும் பயறைப் பத்திரமாகக் கொண்டு செல்’’ என்று சொல்லிவிட்டு மெல்ல அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். அவர் அங்கிருந்து அகன்றுவிட்டதைக் கண்ட அந்த வண்டிக்காரன், “அப்பாடா.. தப்பித்தோம்’’ என்று பெருமூச்சுவிட்டான்.

பத்திரமாக மிளகை சேரநாட்டு மன்னனிடம் கொண்டு சேர்த்தான் அவன். மாளிகையில் இருந்த ஆட்கள், மூட்டையைப் பிரித்து சோதித்தார்கள். மூட்டையை திறந்த அவர்கள் அதில் இருப்பதைக் கண்டு, பெரியதாக வாயைத் திறந்தார்கள். பிறகு நொடிகூட தாமதிக்காமல், ஓடிச் சென்று வண்டிக்காரனை பிடித்து இழுத்து வந்தார்கள். மிளகுக்கு ஈடாக தந்த பொற்காசுகளை பிடுங்கினார்கள்.

“மிளகுக்குப் பதில், பயறைக் கொடுத்தா ஏமாற்று கிறாய். இரு! மன்னனிடம் உன்னைப் பற்றி சொல்லி தண்டனை வாங்கித் தருகிறோம்’’ என்று பற்களை நற நற வென்று கடித்தபடி, அரண்மனைக் காவலர்கள் அவனை மிரட்டினார்கள். அப்போதுதான் அவனுக்கு விஷயம் புரிந்தது. ஆனால், வண்டியில் மூட்டை மூட்டையாக இருந்த மிளகு எப்படி பயறாக மாறியது என்று அவன் சிந்திக்கலானான். ஒன்றும் அவன் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆகவே, திக்கற்றவனுக்குத் தெய்வம்தான் துணை, என்னும் முதுமொழிக்கு ஏற்ப, கைகளைக் கூப்பி கண்ணீர் மல்கி, அந்த ஈசனைச் சரண் புகுந்து மன்றாடினான். ஒரு தவறும் செய்யாத தனக்கு அரச தண்டனையா? என்று குமுறினான். அப்போது ஆகாயத்தில் ஒரு இடி இடித்தது. இடி ஓய்ந்த பின் ஒரு குரல் கேட்டது.

“அன்பனே! உனது பக்தியை சோதிக்கவே, யாம் இந்த திருவிளையாடலை செய்தோம். முதியவன் வடிவில் உன்னைத் தடுத்தாட்கொள்ள வந்த என்னைப் பொய் சொல்லி விரட்டிவிட்டாய். சத்திய ஞானமே வடிவான என்னிடத்தில் நீ பொய் சொன்னதால், உன் வண்டியில் இருந்த மிளகுமூட்டை, உன் வார்த்தைக்கு ஏற்ப பயறு மூட்டையாக மாறியது. நான் முதியவனாகத் தோன்றிய இடத்தில், வந்து என்னை வேண்டி வணங்கினால், நீ இழந்தது உனக்கு மீண்டும் கிடைக்கும்’’ என்று ஆகாயத்தில் இருந்து அசரீரி வடிவாக அண்ணல் சிவ பெருமான் பேசினார்.

அதைக் கேட்டு கண்களில் நீர்மல்க, உடல் சிலிர்க்க, மெய் மறந்தான் பரம பக்தனான அந்த வண்டிக்காரன். ஈசனிடம் பொய் சொல்லிவிட்டோமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டன். இன்பமும் துன்பமும் ஒரே சமயத்தில் மேலோங்க திண்டாடினான். “நீங்கள் முதியவராக வந்த இடம் எதுவென்று எனக்கு நினைவில்லையே! என்ன செய்வேன்?’’ என்று வானத்தைப் பார்த்து கண்ணீர் மல்க மன்றாடிக் கேட்டான் அவன்.

“குழந்தாய் வருந்தாதே! நீ வந்த வழியிலேயே மீண்டும் வண்டியை ஓட்டிச்செல். எந்த இடத்தில் வண்டியின் மாடுகள் நகராமல் அப்படியே நிற்கிறதோ, அந்த இடம்தான் நான் உனக்கு முதியவனாகக் காட்சி தந்த இடம்’’ என்று பக்தன் கேட்ட கேள்விக்குப் பதில், ஆகாயத்தில் இருந்து அசரீரியாக ஒலித்தது. அந்த ஒலி வந்த திக்கை நோக்கி கரம் குவித்து வணங்கினான் அந்த மிளகு வியாபாரி.

ஈசன் சொன்னபடியே, அவனுக்குக் காட்சி கொடுத்த இடத்தில், அவனது வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடுகள் நகராமல் நின்றன. அதைக் கண்டு இந்த இடம்தான் இறைவன் தனக்குக் காட்சி தந்த இடம் என்று உணர்ந்த வண்டிக்காரன், அந்த இடத்தை அவன் அடைந்தவுடன் பயறாக மாறியிருந்த மிளகு, மீண்டும் மிளகாக மாறியது. அதைக் கண்ட அந்த பக்தன் இறைவன் கருணையை எண்ணி வியந்தான். கொண்டு வந்த மிளகை ஈசனுக்குச் சாற்றி வழிபட்டான். இதனால் குரங்குத்தளி சுக்ரீஸ்வரரை, “மிளகீசன்’’ என்று அழைக்கிறார்கள். பக்தர்கள் எட்டு நாட்கள் இறைவனுக்கு மிளகு சாற்றி வழிபட்டு, அந்த மிளகை எட்டு நாட்கள் உட்கொள்கிறார்கள். இதனால், அவர்கள் உடலில் இருக்கும் நோய்கள் அனைத்தும் நீங்குவது இன்றளவும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

ஒரு முறை இந்த ஊரில் இருந்த விவசாயியின் வயலுக்குள் பசுமாடு ஒன்று புகுந்து, பயிர்கள் அனைத்தையும் மேய்ந்து கொண்டிருந்து. அதைக் கண்ட அந்த விவசாயி, கோபமடைந்து, அந்த பசு மாட்டின் கொம்பையும் காதையும் வெட்டி எறிந்தான். அந்த பசுமாடு ரத்தம் சொட்டச் சொட்ட அலறியபடி ஓடியது. அந்த விவசாயி, மாட்டை வெகுதூரம் துரத்திவிட்டான். மறு நாள் ஈசனைத் தரிசிக்க ஆலயத்துக்கு வந்தவனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. ஈசன் முன்னே இருந்த நந்தியின் காதுகளும் கொம்புகளும் அரியப்பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

அதை பார்த்தவுடன்தான் அவனுக்குப் புரிந்தது, பசுமாடு வடிவில் வந்து, நேற்று தனது வயலில் மேய்ந்தது, சாட்சாத் நந்திதேவர் என்று தெரியாமல் காதையும் கொம்பையும் அரிந்து அபசாரபட்டோமே என்று அவன் மனதிற்குள் புழுங்கினான். செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, ஒரு புது நந்தியை கோயிலில், பிரதிஷ்டை செய்தான். பழைய நந்தியை, புது நந்தியின் பின்னே தள்ளி வைத்தான். மறுநாள், மீண்டும் கோயில் வந்து பார்த்த போது, அடிபட்ட பழைய நந்தி ஈசனுக்கு முன்னாடியும், புதிய நந்தி பின்னாடியும் இடம் மாறியிருந்தன.

இதைக் கண்டு அனைவரும் அதிசயித்து நின்றார்கள். அனைவரும் நடந்தது என்னவென்று விளங்காமல் தவித்தார்கள். இது ஈசன் திருவிளையாடலா.? அல்லது ஏதாவது கண்கட்டு வித்தையா? என்று பயந்தார்கள். பக்தர்களை மேலும் கலக்கத்தில் ஆழ்த்த விரும்பாத இறைவன், அசரீரியாகக் குரல் கொடுத்தான். “பழைய நந்தியே எனக்கு மிகவும் விருப்பமானது. அதுவே என் முன்னே இருக்கட்டும். அதனால்தான் நந்தியை இடம் மாறி இருக்கச் சொல்லி கட்டளையிட்டேன்’’ என்று ஈசனின் அமுதக்குரல் வானில் இருந்து கேட்டது. மாலும், நான்முகனும் தேடியும் அடைய முடியாத தெய்வத்தின் குரலை நாம் கேட்டது கோடி ஜென்மத்துத் தவப்பயன் என்று மக்கள் மனம் மகிழ்ந்தார்கள்.

குரங்குத்தளி சுக்ரீசனை, கிருதயுகத்தில் காமதேனுவும், திரேதாயுகத்தில் சுக்ரீவனும் (ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க பூஜித்தார்), துவாபர யுகத்தில், ஐராவதம் என்னும் தேவலோகத்து வெள்ளையானையும், கலியுகத்தில் தேவர்களும் பூஜித்து இருக்கிறார்கள். கோயிலின் பழமையின் காரணமாகவும், சிற்ப வேலைப்பாடுகளின் நேர்த்தியின் காரணமாகவும், தொல்பொருள் ஆய்வுத் துறையினால் இந்தக் கோயில் பாதுகாக்கப் படுகிறது. இறைவன் அக்னி ரூபமாக இந்த தலத்தில் இருக்கிறார். நிலம், நீர், காற்று வடிவான லிங்கங்கள் கோயில் பிராகாரத்தில் இருக்கிறது. ஆகாய சொரூபமாக இருந்த லிங்கம், மண்மூடிப்போனதாகச் சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் இப்போது பெரிதாக ஒரு வில்வமரம் தல விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

தட்சிணாயணம் மற்றும் உத்தராயணம் இணையும் நேரத்தில், சூரிய கிரணங்கள் இறைவன் திருமேனியில் அழகாக விழுகின்றன. சுந்தர மூர்த்தி சுவாமிகள், “கொங்கிற் குறும்பில் குரங்குத்தளி’’ என்று இந்த திருத் தலத்தை போற்றுகிறார். குரங்கான சுக்ரீவன் பூஜித்ததால், ஊருக்கு குரங்குத்தளி என்ற பெயர் வந்தது. அம்பிகை ஆவுடை நாயகி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சாதாரண மிளகு வியாபாரியில் இருந்து, காமதேனு, சுக்ரீவன், தேவர்கள் எனப் பலரும் போற்றி பலன் பெற்ற இந்த இறைவனை, நாமும் சென்று வணங்கி நற்கதி அடைவோம். சர்க்கார் பெரிய பாளையம் என்றும், எஸ் பெரியபாளையம் என்றும் அழைக்கப்படும் இவ்வூர், ஊத்துக்குளி சாலையில் திருப்பூரில் இருந்து எட்டு கிமீ தூரத்தில் உள்ளது.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post நோய்க்கு மருந்தாகும் ஈசன் appeared first on Dinakaran.

Tags : Eason ,
× RELATED புத்திர தோஷம் நீக்கும் திருத்தலம்