×

கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடல்.. வனத்துறை அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை புரிகின்றனர். இந்த ஆண்டும் கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து சென்றுள்ளனர். கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் மேயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது.

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இந்த‌ சுற்றுலா த‌ல‌ங்கள் அனைத்தையும் கண்டு ரசிப்பது வழக்கம். விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. சரிவர குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் அடிப்படை வசதிகள் செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது. மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் இத்தகைய அறிவிப்பால் கொடைக்கானலுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி சுற்றுலாப்பயணிகளை நம்பியுள்ள வாகன ஓட்டிகள், சிறு வியாபாரிகள், கடை வைத்திருப்போர் கடும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். இருப்பினும் விரைவில் பராமரிப்பு பணிகளை முடித்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடல்.. வனத்துறை அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Guna cave ,Dindigul ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில்...