×

தூங்கா நகரத்துக்கே தூக்கம் வந்திடுச்சு…!ஆனா எய்ம்ஸ் வரல… பாஜவுக்கு தேர்தல் ஜூரம் வந்தா மட்டும் வரும்…

‘ஏய்… அதோ பாரு கொடைக்கானல் மலை தெரியுது…’ மதுரை, திண்டுக்கல், பழனி பக்கமெல்லாம் போன மக்கள் பரவலாக சொல்லக் கூடிய வார்த்தைதான் இது. இப்படிதான் இப்போ மதுரையில பரபரப்பா சொல்லப்படுகிற வார்த்தை, ‘அதோ பாரு எய்ம்ஸ்…’ எங்கேனு கேட்டா, ‘தூரத்தில ஒரு காலி இடம் இருக்கா… அங்கதான் எய்ம்ஸ் வரும்னு சொன்னாங்க… ஆனால், 4 வருஷம் மேல் ஆகிடுச்சு… செங்கல் மட்டும்தான் இருக்கு… ஆஸ்பிட்டல் எங்கேனு கேட்டா… 2026ல் வரும்னு சொல்றாங்க… அறிவிப்பு வெளியிட்டு 3 வருஷத்துக்கு அப்புறம் இடத்த கண்டுபிடிச்சாங்க… அதுக்கு அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு அடிக்கல் நாட்டுனாங்க… இப்போ 4 வருஷமா ஆகிடுச்சு… வெறும் வானம் பார்த்த பூமியாக மட்டுமே உள்ளது. இந்த காட்சிகள் எல்லாம் பார்க்கும்போது வரும்… ஆனா வராது… என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. இந்த எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு எவ்வளவு, படுக்கைகள் வசதி எவ்வளவு, எப்போ பயன்பாட்டிற்கு வரும் என பல்வேறு கேள்விகளுக்கு பாஜ அமைச்சர்கள், தலைவர்கள் எல்லாம் ஆளுக்கொரு தகவலை சொல்லி மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் தாமதம்
தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015, பிப்ரவரியில், பாஜ அரசின் பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பதற்காக செங்கிப்பட்டி (தஞ்சை), செங்கல்பட்டு, புதுக்கோட்டை, பெருந்துறை (ஈரோடு), தோப்பூர் (மதுரை) ஆகிய 5 இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. 200 ஏக்கருக்கும் அதிகமாக நிலம், சாலை, ரயில், குடிநீர், விமான போக்குவரத்து வசதிகள், தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய அரசின் குழு 5 இடங்களையும் பார்வையிட்டது. இறுதியாக ரூ1,265 கோடி நிதியில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என 2018, ஜூனில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் எய்ம்ஸ் தங்கள் தொகுதியில் அமைய வேண்டுமென அப்போதைய அதிமுக அமைச்சர்களில் சிலரின் சுயநலத்தால், எய்ம்ஸ் இடம் தேர்விலேயே 3 ஆண்டுகள் வீணாகிப்போனது. அதன் பின்னர் 6 மாதங்கள் கழித்து மதுரை எய்ம்ஸ்க்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

2019ல் மோடி அடிக்கல்
2019ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுரைக்கு வந்த பிரதமர் மோடி, கடந்த 27.1.2019ல் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டியதில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டிற்கு வருமென தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி கூட முழுமையாக நிறைவடையவில்லை. கட்டுமானப் பணிகளுக்காக செங்கல் வைத்ததோடு சரி. ஒருவழியாக கடந்த ஆகஸ்ட், 2020ல் வரும் டிசம்பர் மாதம் ஜப்பானின் ஜிகா நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானதும் கட்டுமானப் பணிகள் தொடங்குமென அறிவிக்கப்பட்டது. அப்போதைய அதிமுக அரசு, மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கவில்லை என ஒன்றிய பாஜ அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியது. தொடர் இழுபறி நீடித்ததால் ஐகோர்ட் மதுரை கிளையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து துவங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது ஒன்றிய அரசு, அதிமுக அரசு தரப்பில் பரஸ்பரம் குற்றம் சாட்டின. இறுதியாக அப்போதைய தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் 2020, நவ. 3ம் தேதி மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசுக்கு நிலம் ஒப்படைக்கப்பட்ட அத்தாட்சியை வழங்கியது. அதைப்பார்த்த நீதிபதிகள் ஒன்றிய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்ட அதிகாரிகளுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், கட்டுமானப்பணிகளை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

நீ…………..ண்ட இழுபறி…
நீ………ண்ட இழுபறிக்கு பின் ஒருவழியாக ஜப்பான் ஜிகா நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் கடந்த மார்ச், 2021ல் செய்யப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தானதும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு முதல் கூட்டம் ஜூன் 2021ல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியாவில் 16வது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைவதாகவும், ரூ1,978 கோடியில் இம்மருத்துவமனை கட்டுமான பணிகள் 2023ம் ஆண்டு துவங்கி, 2026ல் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
முடியும் நேரத்தில் துவக்கம்…
பிரதமர் மோடி 2019ல் அடிக்கல் நாட்டும்போது 2022க்குள் கட்டி முடிக்கப்படும் அல்லது 2023ல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், 2023ம் ஆண்டில்தான் பணிகளே தொடங்கும் என்று தெரிவித்திருப்பது தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரூ1,264 கோடியில் தொடங்கிய திட்ட மதிப்பீடு, தற்போது ரூ1,978 கோடியாக உயர்ந்துள்ளது. பணிகள் ஆரம்பிக்கும்போது இறுதியாக எவ்வளவு உயருமென கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தற்போதைய சூழலில் இதுவரை கட்டுமான பணிகளே துவங்காத நிலையில், 2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் பயன்பாட்டிற்கு வருமென பாஜ அமைச்சர்கள் முதல் தலைவர்கள் வரை தொடர்ந்து கூறி வருகின்றனர்.

தேர்தல் ஜூரம்
கடந்த 9 ஆண்டு பாஜ ஆட்சியில் தமிழகத்துக்கு தனித்துவமான எந்த திட்டத்தையும் ஒன்றிய அரசு செய்யவில்லை. தைரியம் இருந்தால் அவர்களை பட்டியல் போட சொல்லுங்கள் என்று எதிர்க்கட்சிகள் சவால் விட்டு வருகின்றன. இதனால் அறிவித்த எய்ம்சுக்கு தற்போது ஒன்றிய அரசு முட்டு கொடுத்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு இந்த மதுரை எய்ம்ஸே சாட்சி. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் பாஜ ஜூரமாக ‘இந்தியா’ கூட்டணி மாறி உள்ளது. குறிப்பாக, இந்த தேர்தலுக்கு தமிழ்நாடு முக்கிய களமாக பார்க்கப்படுகிறது. இதனால் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்களுக்கு தமிழ்நாடு மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எய்ம்ஸ் கண்டிப்பாக கட்டி தருவோம். எங்களை நம்புங்கள் என்று அழுவாத குறையா போகிற இடமெல்லாம் பேசி வருகின்றனர். ‘வந்தாரை வாழ வைக்கும் ஊர்’ தமிழ்நாடு என்றாலும், மக்களை முட்டாளாக்க நினைத்தவர்கள் யாரும் இங்கு நிலைத்ததில்லை என்பதே நிதர்சன உண்மை.

8 வருஷமா இதுதான் பண்ணாங்க…
மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு, 8 ஆண்டுகள் நகர்ந்திருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் கவனம் காட்டாமல், இந்த எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்பை ராமநாதபுரத்தில் துவக்கி தற்காலிகமாக நடத்தி வருவதே ஒன்றிய அரசின் உச்சபட்ச கூத்தாக இருக்கிறது. எய்ம்ஸ் தொடர்பான ஒன்றிய அரசின் பணிகளை பார்ப்போமா?
1 தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட தேதி – 28.02.2015.
2 மதுரை தோப்பூரில் இடம் தேர்வு – 18.06.2018
3 ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய தேதி – 17.12.2018
4 மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட தேதி – 27.01.2019

5 சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங்கப்பட்டது – 25.11.2019
6 மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசுக்கு இடம் ஒப்படைக்கப்பட்ட தேதி – 3.11.2020.
7 நிர்வாக இயக்குநர் அறிவிப்பு 22.2.2021
8 கடன் ஒப்பந்தம் கையெழுத்து 26.3.2021.
9 மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்ற தேதி 16.07.2021
10 இதன்பிறகு எய்ம்ஸ் திட்டத்தில் பெரிய அளவிலான எந்த முன்னேற்ற பணிகளும் நடக்கவில்லை..

பாஜ தலைவர்கள் பேச்சு… பொழுது விடிஞ்சா போச்சு…
பாஜ தலைவர்களும் சரி, ஒன்றிய அமைச்சர்களும் சரி மதுரை எய்ம்ஸ் குறித்து எந்த கணக்கீடும், சரியான தகவலுமின்றி உளறிக் கொட்டி வருகின்றனர். இன்னும் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்காத நிலையில், கடந்தாண்டு செப்டம்பரில் மதுரை வந்த பாஜ தேசியத் தலைவர் ஜேபி.நட்டா, எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக பேசி மிரள வைத்தார். காம்பவுண்ட் சுவர் பணிகளே 95 சதவீதம் தான் முடிந்திருக்கிறது. இவர் கட்டுமான பணியே 95 சதவீதம் முடிவடைந்ததாக கூறியது நகைப்பையும் ஏற்படுத்தியது. பாத யாத்திரை என்ற பெயரில் வாகனத்தில் சுற்றும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையோ, ‘இந்தியாவின் பிற எய்ம்ஸ்களை காட்டிலும் மதுரை எய்ம்ஸ் முற்றிலும் மாறுபட்டது. மற்றதெல்லாம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் விரிவாக்கம். ஆனாலோ, தென் இந்தியாவின் மையமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. மற்ற மாநிலங்களின் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ரூ600, ரூ700 கோடிதான் செலவானது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ2600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என போகிற போக்கில் ஒரு குண்டை வீசி விட்டு சென்றார். எய்ம்ஸ்க்கு நிதியே ரூ1,978 கோடி என்ற நிலையில், எந்த அடிப்படையில் ரூ2,600 கோடியில் அமைகிறது என அண்ணாமலை கூறினார் என தெரியவில்லை.

ஒன்றரை ஆண்டுகளுக்குள் கட்டிய எய்ம்ஸ்க்கு நிகரான மருத்துவமனை
கடந்தாண்டு மார்ச் 21ம் தேதி சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கான கட்டுமான பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டி ஒன்றரை ஆண்டுகளுக்குள் கட்டுமான பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கே வந்து விட்டது. இம்மருத்துவமனை சர்வதேச தரத்தில் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள், 1,000 படுக்கைகளுடன் எய்ம்ஸ்க்கு நிகராக அமைக்கப்பட்டுள்ளது. சொல்லி அடித்தால் போல இம்மருத்துவமனையும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் திறக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசின் எய்ம்ஸ் எட்டாக்கனியாகவே நீடிக்கிறது.

ஜப்பானிடம் கடன் வாங்க நேருதான் காரணமா?
சர்வதேச தரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென்ற எண்ணத்தை செயல்படுத்தியவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. கடந்த 1946ம் ஆண்டு இந்தியாவின் சுகாதார கணக்கெடுப்பு மற்றும் வளர்ச்சிக் குழுத் தலைவராக ஜோசப் போர் என்பவர் இருந்தார். அப்போது அவர், அதிநவீன வசதிகளுடன் ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இந்தியாவில் நிறுவ வேண்டுமென தெரிவித்தார். உடனே பிரதமர் நேருவும், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமாரி அம்ரித் கவுரும் டெல்லியில் அந்த மருத்துவமனையை அமைக்கத் திட்டமிட்டனர். அப்போதைய சூழலில் இதற்கான போதிய நிதி ஆதாரம் இந்திய அரசிடம் இல்லை. எனவே வெளிநாட்டில் கடன் வாங்க தீர்மானிக்கப்பட்டது.

நியூசிலாந்து அளித்த நிதியுதவியுடன் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1952ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1956ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளராத காலக்கட்டத்தில் வெளிநாட்டு கடன் பெற்று திட்டமிட்டபடி முடித்துள்ளது பாராட்டிற்குரியது. தற்போது மதுரை எய்ம்ஸ்க்கு ஜப்பான் நிறுவனத்திடம் கடன் வாங்குவதற்கு நேருதான் காரணமென பாஜ அரசு குற்றம் சாட்டினாலும் பெரியதாக ஆச்சரியப்பட வேண்டாம். ஏன் என்றால் எல்லாத்துக்கும் நேருதான் காரணம் என்று பாஜ விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒப்படைக்காத நிலத்தில் பிரதமர் எப்படி அடிக்கல் நாட்டினார்?.. நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பதிலடி

கடந்த 10ம் தேதி மக்களவையில் திமுக எம்பிக்கள், 5 ஆண்டுகளாகியும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் எப்போ வரும் என்று கேட்டு கோஷமிட்டனர். இதற்கு பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘நிலம் கையகப்படுத்துவதை தமிழ்நாடு அரசு தாமதித்ததால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் செலவு ரூ1,200 கோடியில் இருந்து ரூ1,900 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, இந்த தாமதத்திற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதற்கான மொத்த செலவு ரூ1,977.80 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து ஊர்களிலும் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 750 படுக்கைகள் மட்டுமே இருக்கும். ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 950 படுக்கைகள் இருக்கும்.

தொற்று வியாதி வராமல் தடுப்பதற்கான வார்டுகள் கட்டப்படுவதால் கூடுதலாக 150 படுக்கைகள் அமைக்கப்படுகிறது. எய்ம்ஸ் கட்டுவது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் திட்டம் என்பதால், ஒன்றிய அரசே முழு கடனுக்கும் பொறுப்பாகும்’’ என்றார். இதற்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘‘2019ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்க்கு, நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் சொல்கிறார். ஆனால் 4 வருடங்களுக்கு முன் நிலம் ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்படியானால் யாரை ஏமாற்ற அடிக்கல் நாட்டினீர்கள்? அந்த இடம் மாவட்ட நிர்வாகத்தின் வசமிருந்தது. அதனை ஒன்றிய அரசுக்கு மாற்றிக் கொடுத்த பின்னர் தான், பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி உள்ளார்.

அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு பின், ஒன்றிய அரசின் குழுவினர் வந்து ஆய்வு செய்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இது 2021ல் திமுக அரசு அமைவதற்கு முன்பே நடந்தது. இப்படி தவறான தகவலை ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது மிகவும் மோசமானது’’ என்றார். ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்படுமென கூறி வந்த நிலையில், புதிய தகவல் போல 950 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படுவதாக கூறி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தன் பங்குக்கு குழப்பினார். இதிலும் 750+150 = 900 படுக்கைகள்தான் வருகிறது. ஆனால், நிர்மலா சீதாராமன் 950 படுக்கைகள் என கூறி உள்ளார். நாட்டின் நிதியமைச்சர் இவ்வளவு குழப்பத்தில் இருந்தால் திட்டங்களை எப்படி விரைவாக செயல்படுத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

 

The post தூங்கா நகரத்துக்கே தூக்கம் வந்திடுச்சு…!ஆனா எய்ம்ஸ் வரல… பாஜவுக்கு தேர்தல் ஜூரம் வந்தா மட்டும் வரும்… appeared first on Dinakaran.

Tags : Dhonga ,AIIMS ,Baj ,Kodaikanal hill ,Madurai ,Dindigul ,Palani ,
× RELATED எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி: நிபுணர் குழு பரிந்துரை