×

புதிய வடிவமைப்பிலான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் இந்தாண்டில் தயாரிக்கப்படும்: ரயில்வே பொது மேலாளர் மல்லையா தகவல்

சென்னை: புதிய வடிவமைப்பிலான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் இந்த ஆண்டில் தயாரிக்கப்படும் என ஐசிஎப் பொது மேலாளர் பி.ஜீ.மல்லையா தெரிவித்தார். சென்னை ஐசிஎப் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் ஐசிஎப் பொதுமேலாளர் பி.ஜீ.மல்லையா தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கின்படி, கடந்த ஆண்டில் 12 புதிய வடிவமைப்பிலான வந்தே பாரத் ரயில் தொடர்கள் 2261 எச்.பி வகை ரயில் பெட்டிகள் உள்பட 2702 ரயில் பெட்டிகளை ஐசிஎப் தயாரித்துள்ளது. இந்திய எரிசக்தி அமைப்பின் மூலம் சூனிய பிளஸ் என்று அழைக்கப்படும் சான்றிதழ் பசுமை எரிசக்தி பயன்படுத்துவதற்காக ஐசிஎப் நிர்வாக அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐசிஎப் விளையாட்டு வீரர் சண்முகம் ஆசிய வலு தூக்கும் போட்டிகளில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். ரயில்வே பாதுகாப்பு படை இந்த தயாரிப்பு ஆண்டை பொறுத்தவரை ஐசிஎப் 3241 ரயில் பெட்டிகள் 30 வகைகளில் புதிய வடிவமைப்பிலான வந்தே பாரத் வகை ரயில் பெட்டிகள் உள்பட தயாரிப்பிற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனம் வசதியற்ற பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கான வந்தே பாரத் ரயில் போன்ற வசதிகள் கொண்ட புஷ் புல் வடிவமைப்பிலான சாதாரண ரயில் பெட்டிகளை தற்போது ஐசிஎப் தயாரித்து வருகிறது. இந்த ரயில்களில் முன்புறமும், பின்புறமும் தனியாக என்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும். வந்தே பாரத் வடிவமைப்பு கொண்ட வந்தே மெட்ரோ ரயில்களை ஐசிஎப் இந்த தயாரிப்பு ஆண்டில் தயாரித்து அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் குறைந்த தொலைவிலான நகர்களுக்கிடையே இயக்கப்படும். பயணிகள் எளிதாக ஏறி இறங்க தானியங்கி கதவுகள் இந்த ரயிலில் பொருத்தப்படும். நெடுந்தொலைவு பயணிக்கும் ரயில் பயணிகளுக்காக வந்தே பாரத் போன்ற படுக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகளை ஐசிஎப் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த ரயில் இந்த உற்பத்தி ஆண்டில் தயாரிக்கப்படும். ஈ காமர்ஸ் வணிகர்களுக்காக பொருட்கள் மற்றும் அழுகக்கூடிய பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல குளிர் வசதிகொண்ட கதி சக்தி ரயில் தொடர்களை ஐசிஎப் தயாரிக்க உள்ளது. இந்த ரயில்கள் பொருட்களை விரைவாக எடுத்துச் செல்ல உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.

The post புதிய வடிவமைப்பிலான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் இந்தாண்டில் தயாரிக்கப்படும்: ரயில்வே பொது மேலாளர் மல்லையா தகவல் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,General Manager ,Railways ,Mallya ,Chennai ,ICF ,BG Mallya ,Railway ,Dinakaran ,
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...