×

2022-23 நிதியாண்டில் ரூ170 கோடி சொத்துகள் பறிமுதல்; வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் எச்சரிக்கை

சென்னை: 2022-23 நிதியாண்டில் ரூ170 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் எச்சரித்துள்ளார். சென்னை வருமான வரித்துறை வளாகத்தில் 77வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் மற்றும் வருமான வரி தலைமை இயக்குநர் (புலனாய்வு) சுனில் மாத்தூர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

விழாவில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை தலைமை ஆணையர்கள், வருமான வரி மூத்த அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நேரடி வரிவிதிப்பு துறையில் சிறந்து விளங்கியதற்காக வருமான வரித் துறையின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வருமான வரி முதன்மை தலைமை ஆணையரின் “தகுதிச் சான்றிதழ்” வழங்கப்பட்டது. விழாவில் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் மற்றும் வருமான வரி தலைமை இயக்குநர் (புலனாய்வு) சுனில் மாத்தூர் பேசியதாவது: நமது நாடு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாகவும், பொருளாதாரத்தில் உலகின் 5வது பெரிய நாடாகவும் கருதப்படுகிறது.

நம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பொருளுதவியை வழங்குவதில் வருமான வரித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 2023-24 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயின் இலக்கு 33.6 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நேரடி வரி வசூல் 18.3 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த வரி வசூலில் 54 சதவிதம் வருமான வரித்துறையின் பங்களிப்பு ஆகும். வரி வசூல் மற்றும் வரி செலுத்துவோர் சேவைகளுடன், வருமான வரித்துறை செயல்பாட்டின் ஒரு பகுதியாக வரி ஏய்ப்புக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையும் ஒன்றாகும். வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நேர்மையான வரி செலுத்துவோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் புலனாய்வுப் பிரிவு 2022-23 நிதியாண்டில் 81 சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ரூ170 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ120 கோடி ரொக்கம் மற்றும் ரூ50 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையில், கணக்கில் காட்டப்படாத ரூ5,200 கோடி வருமானமும் கண்டறியப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

The post 2022-23 நிதியாண்டில் ரூ170 கோடி சொத்துகள் பறிமுதல்; வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Principal Chief Commissioner ,CHENNAI ,Dinakaran ,
× RELATED AI குரல் குளோனிங்கைப் பயன்படுத்தி...