×

திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரிந்தது பல்கலை. வளாகத்தில் புகுந்த சிறுத்தை: மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரிந்த சிறுத்தை பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்ததால் மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருப்பதி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை நேற்று முன்தினம் அதிகாலை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. ஆனால் சில மணி நேரத்தில் மீண்டும் வேறு ஒரு சிறுத்தை அதே இடத்தில் வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல்துறை கட்டிடம் எதிரே வனப்பகுதியில் இருந்து திடீரென ஒரு சிறுத்தை வந்தது. இதனைகண்டு அங்கிருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது மாணவர்கள் சிலர் சிறுத்தையை மறைந்திருந்த புகைப்படமும் எடுத்துள்ளனர்.

மேலும் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் ெதரிவித்தனர். தகவலறிந்த போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்தும், அதிக சத்தம் எழுப்பியும் விரட்டியடித்தனர். தொடர்ந்து சிறுத்தை வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் கடந்த 3 நாட்களாக சுற்றிவந்த சிறுத்தை, தற்போது மலையடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரவு 7 மணிக்கு பிறகு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும், அதேபோல் தனியாக யாரும் செல்லவேண்டாம் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரிந்தது பல்கலை. வளாகத்தில் புகுந்த சிறுத்தை: மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupati mountain pass ,Leopard ,Tirumala ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்