ஆக்லாந்து: மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் விளையாட ஸ்பெயின் அணி முதல் முறையாக தகுதி பெற்றது. ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் – ஸ்வீடன் அணிகள் மோதின. இரு அணிகளுமே தற்காப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் இடைவேளயின்போது 0-0 என சமநிலை வகித்தன. 2வது பாதி ஆட்டத்திலும் இந்த இழுபறி நீடித்தது. 81வது நிமிடத்தில் சல்மா அபாரமாக கோல் அடிக்க ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது.
பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஸ்வீடன் அணிக்கு ரெபக்கா புளோம்க்விஸ்ட் 88வது நிமிடத்தில் கோல் அடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். அடுத்த நிமிடத்திலேயே ஸ்பெயின் கேப்டன் ஓல்கா கர்மோனா கோல் அடிக்க, அந்த அணி 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால், ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று முதல் முறையாக மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளிடையே இன்று நடக்கும் 2வது அரையிறுதியில் வெற்றி பெறும் அணி, ஆக.20ல் நடக்க உள்ள பைனலில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளும்.
The post மகளிர் உலக கோப்பை கால்பந்து: பைனலில் ஸ்பெயின் appeared first on Dinakaran.