- முதல்வர்
- கெ ஸ்டாலின்
- சென்னை
- முதலமைச்சர்
- இந்தியா
- 77வது சுதந்திர தினம்
- செயின்ட் ஜார்ஜ் கோட்டை
- முதல்வர்
- கி.மு.
சென்னை: இந்தியாவின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூவர்ண கொடியை ஏற்றினார். போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், சமூக சேவகர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில், தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக ஏற்றி வைத்தார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க காலை 8.49 மணிக்கு கோட்டை கொத்தளம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, தலைமைசெயலாளர் சிவ் தாஸ் மீனா வரவேற்றார். இதன் பின்னர், தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கரண் சிங் பிரார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிகுமார் திங்ரா, ஏர் கமாண்டர் ரத்திஷ் குமார், கடலோர காவல்படை அதிகாரி ஆனந்த் பிரகாஷ் படோலா, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் ஆகியோரை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை மற்றும் கேரளா காவல்துறையினர் நடத்திய அணி வகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று முதல்வர் பார்வையிட்டார். இதன் பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதல்வர் ஏற்றினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது, வசந்தா கந்தசாமிக்கு அப்துல் கலாம் விருது, முத்தமிழ் செல்விக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கினார்.
ஆதரவற்ற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர் தேரணி ராஜனுக்கும், பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்தது விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
அதேபோல. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருது, மருத்துவர் ஜெயகுமாருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாந்தி நிலையத்திற்கும், சமூக பணியாளர் கோவையை சேர்ந்த ரத்தன் வித்யாசாகருக்கும், மாற்றுத்திறனாளிகளை அதிகம் அளவில் பணியமர்த்திய மதுரை மாவட்டத்தில் உள்ள டெடி எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியான ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒளி நிறுவனத்திற்கும், சிறந்த சமூக சேவகர் கோவையை சேர்ந்த ஸ்டான்லி பீட்டருக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருது வழங்கினார்.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலமாக 9வது மண்டலம் முதல் பரிசையும், 5வது மண்டலம் இரண்டாவது பரிசையும் வென்றது. சிறந்த மாநகராட்சியாக முதல் பரிசு திருச்சிக்கும் இரண்டாவது பரிசு தாம்பரம் மாநகராட்சிக்கும் வழங்கப்பட்டது.
நகராட்சிகளில் ராமேஸ்வரம் முதல் பரிசையும் திருத்துறை பூண்டி இரண்டாம் பரிசையும், மன்னார்குடி மூன்றாம் பரிசையும் பெற்றது. சிறந்த பேரூராட்சிகளில் முதல் பரிசு விக்கிரவாண்டி, இரண்டாம் பரிசு ஆலங்குடி வீரக்கல் புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு வழங்கப்பட்டது. முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள் ஆண்கள் பிரிவில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கோபி, செங்கல்பட்டு மாவட்ட சேர்ந்த ராஜசேகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதேபோல, பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த விஜயலட்சுமி, மதுரையை சேர்ந்த சந்திரலேகா, காஞ்சிபுரத்தை சேர்ந்த கவிதா தாந்தோனி ஆகியோருக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார்.
இந்த ஆண்டு முதல் முறையாக போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழ்நாடு முதல்வர் காவல் பதக்கம் முன்னாள் மதுரை தெற்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க், கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தேனி காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், கோவை மத்திய குற்ற பிரிவு காவல் உதவி ஆணையர் குணசேகரன், நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் முதல் நிலை காவலர் குமார் ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆளுநர் நுழைவாயில் முகப்பில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும், விருதுகள் பெற்றவர்கள் முதல்வருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
முதல்வர் கொடியேற்றுவதை நேரில் காண வேண்டும்; கடிதம் எழுதிய சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: முதல்வர் கொடியேற்றுவதை நேரில் காணவேண்டும் என கடிதம் எழுதிய சிறுவனின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வைத்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றுவதை நேரில் காண வேண்டும் என கடந்த 3ம் தேதி முதல்வருக்கு ராமநாதபுரம் மாவட்டம், பாப்பனம் கிராமத்தை சேர்ந்த முன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் லிதர்சன் (8) கடிதம் எழுதி இருந்தார்.
அதன்படி நேற்று மாலை சென்னைக்கு தன்னுடைய தாயார் ஆனந்த வள்ளியுடன் சிறுவன் லிதர்சன் வந்தடைந்தார். அவர்கள் நேற்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டு இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர். ஒருவர் முதல்வருக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்று சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும்.
The post போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், சமூக சேவகர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார் appeared first on Dinakaran.
