
செங்கம், ஆக.15: தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்து நகை பறிக்கும் பெண்ணை கண்டால் கை, கால்களை உடையுங்கள் என புதுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தெரிவிக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி கிராமத்தில் வீட்டில் தனியாக வசித்து வரும் 70 வயது மூதாட்டியிடம், கடந்த வாரம் 13 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை கிளப்பியது. இதுபோன்று தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்து நகைகளை பறித்து செல்லும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மைதிலி என்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்நிலையில், புதுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் என்பவர், வாட்ஸ் அப் குரூப் மூலம் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் கூறியிருப்பதாவது: நான் சப்-இன்ஸ்பெக்டர் பேசுகிறேன். இந்த படத்தில் காணும் பெண் மைதிலி. பெரிய கொல்லப்பட்டி, சேலம் பக்கம். பிறந்த ஊர் சின்ன பள்ளப்பாடி, திருப்பத்தூர் மாவட்டம். இவளுடைய வேலை கிராமங்களில் ஒதுக்குப்புறமான வீடு, குறிப்பாக வயதானவர்கள் உள்ள வீடுகளை நோட்டமிட்டு திருடுவது. முதியவர்களிடம் உங்கள் மகளை தெரியும், உங்கள் உறவினர்களை தெரியும் எனக்கூறி, அவர்கள் அணிந்திருக்கும் நகை மற்றும் பீரோவில் உள்ள நகை ஆகியவைகளை பாலிஷ் போட்டு தருவதாக பல்வேறு சாக்குப்போக்குகளை சொல்லி, அவர்களை உள்ளே தள்ளி பூட்டிவிட்டு நகைகளை திருடி செல்வாள்.
அதன் அடிப்படையில் இந்த பெண் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவளுடன் எக்ஸெல் பைக்கில் ஆண் ஒருவன் வருவான். எனவே, ஊராட்சி தலைவர்களாகிய உங்களுக்கு நான் ஆடியோ அனுப்புகிறேன். நீங்கள் அனைவருக்கும் அனுப்புங்கள். நேற்று முன்தினம்கூட கரியமங்கலத்தில் வயதானவர்களிடத்தில் 8 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளாள். பின்னர், அரட்டைவாடி, கடலாடி ஆகிய பகுதிகளுக்கு சென்று நகை ஏதும் கிடைக்கவில்லை. இதே வேலையாக திரிகிறாள். இவளை பார்த்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள். ஏன் கையை காலை கூட உடையுங்கள். போலீஸ் மூலமாக தண்டிப்பது வாய்ப்பு குறைவு தான்.
பெண் என்பதால் அமைதியாக உள்ளோம். நம்ம ஊர் மக்கள் அனைவரும் ஏழ்மையில் உள்ளனர். இன்று ஒரு பவுன் ரூபாய் ஐம்பதாயிரம் தொட்டுவிட்டது. திருடு போய்விட்டால் வாங்க முடியாது. இந்த ஆடியோவை அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் அனுப்பி உள்ளேன். தயவு செய்து இவள் படத்தை பிரிண்ட் எடுத்து மக்களிடம் கொடுங்கள். கொஞ்சம் எங்களுக்கும் உதவி செய்யுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ பதிவிற்கு பிறகுதான், சிறுகிளாம்பாடி கிராமத்தில் வீட்டில் தனியாக வசித்து வரும் 70 வயது மூதாட்டியிடம் 13 சவரன் நகைகளை இந்த பெண் அபேஸ் செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.
The post நகை பறிக்கும் பெண்ணின் கை, கால்களை உடையுங்கள் சப்-இன்ஸ்பெக்டர் ஆடியோவால் பரபரப்பு தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்து appeared first on Dinakaran.