×

நீட் தேர்வை இரண்டு முறை எழுதியும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை: மகன் இறந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை செய்தார்

சென்னை: எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசையில் 2 ஆண்டுகளாக இரவு, பகல் பார்க்காமல் கடுமையான பயிற்சி எடுத்து படித்து வந்த மாணவன் நீட் தேர்வில் 424 மார்க் எடுத்தும், மருத்துவ படிப்பில் சேர முடியாத துக்கத்தில் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் பிரிவால் மனமுடைந்த தந்தையும் அடுத்த நாளே தற்கொலை செய்து கொண்டார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ படிப்புக்கு தகுதி பெற நீட் தேர்வை மாணவர்கள் எழுதியாக வேண்டும் என்று ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வி, குறைந்த மதிப்பெண் உள்பட பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட அவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வசேகர் (48). இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19). செல்வசேகரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

தந்தை ஆதரவில் வளர்ந்த ஜெகதீஸ்வரன் சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ்2 முடித்தார். தந்தையின் சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் பார்க்காமல் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்கும் மேல் நீட் தேர்வுக்காக படித்தார். 2 ஆண்டுகளாக நீட்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால், குறைந்த மதிப்பெண்களே கிடைத்தது. 2வது முறை எழுதிய நீட் தேர்வின் கட்ஆப் மதிப்பணெ் 117. ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை.

இவருடன் படித்த சிலர் ‘பேமென்ட் கோட்டாவில்’ ரூ.26 லட்சம் வரை செலவு செய்து கடந்த ஆண்டே எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக தனது தந்தையிடம் கடந்த 2 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு படித்தும் நீட் தேர்வில் ‘கட்ஆப்’ மதிப்பெண் பெற்றும் தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்கவில்லை என்று புலம்பியபடி இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகதீஸ்வரனுக்கு அவரது தந்தை செல்வசேகர் இந்த தேர்வு போனால் என்ன அடுத்த தேர்வில் நீ அதிக மதிப்பெண் எடுக்கலாம் என்று ஆறுதல் கூறி மகனை தேற்றினார்.

எனினும் உச்சகட்ட மன அழுத்தத்தில் இருந்த ஜெகதீஸ்வரன் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தான் படிக்கும் அறையில் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், வீட்டு வேலை செய்வதற்கு வந்த மூதாட்டி, படிக்கும் அறையில் ஜெகதீஸ்வரன் தூக்கில் தொங்கியதை பார்த்து அலறினார். இந்த அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அந்த வீட்டில் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் ஜெகதீஸ்வரன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் செல்வசேகருக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டிற்கு வந்த செல்வசேகர், மகன் ஜெகதீஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நீட் தேர்வால், தன் மகனின் எம்பிபிஎஸ் கனவு கலைந்து போனது மட்டுமல்லாமல் மகன் ஜெகதீஸ்வரனையும் இழந்துவிட்டோமே என்று செல்வசேகர் தொடர்ந்து அழுது புலம்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது அறை நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து கொண்டு அறைக்குள் நுழைந்து பார்த்தனர்.

அங்கே செல்வசேகர் கேபிள் வயரில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், செல்வசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு மகன், தந்தை என அடுத்தடுத்து இரு உயிர்களை பறித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நீட் தேர்வை இரண்டு முறை எழுதியும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை: மகன் இறந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை செய்தார் appeared first on Dinakaran.

Tags : MBBS ,CHENNAI ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...