×

சென்னையில் தந்தை, மகன் தற்கொலை நீட் விலக்கு சட்டத்துக்கு ஒன்றிய அரசு உடனடியாக விலக்கு தர வேண்டும்: கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: நீட் தேர்வு ஒரு குடும்பத்தையே காவு வாங்கி விட்டது. நீட் விலக்கு சட்டத்துக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் கூறியிருப்பதாவது: கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): நீட் தேர்வு குறித்து சமீபத்தில் ஆளுநர் கூறிய கருத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. ஆளுநரை விட ஒரு கல் நெஞ்சக்காரர் எவரும் இருக்க முடியாது என்பதற்கு அவரது நச்சுக் கருத்து சான்றாக அமைந்துள்ளது. தமிழக ஆளுநர் தமிழ் சமுதாயத்திற்கே விரோதியாக செயல்பட்டு வருகிறார்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து இட மாட்டேன் என்று 2 நாட்களுக்கு முன்னர் கூட கவர்னர் ஆர்.என்.ரவி கொக்கரித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்த நாளில் குரோம்பேட்டை மாணவரும் அவருடைய தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். எனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வலியுறுத்துகிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): நீட் ஒரு குடும்பத்தையே காவு வாங்கியுள்ளது. நீட் தேர்வு ஓர் உயிர்க்கொல்லி நோய் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அதைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

திருமாவளவன் (விசிக தலைவர்): நீட்தேர்வினால் மகன் மற்றும் தந்தை தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் இதற்கு பிறகு மாறுமா என்று பெற்றோர் எழுப்பிய கேள்விக்கு, ஆளுநர் ஆணவத்தோடு பதில் சொல்லி இருப்பது வலியை தருகிறது. ஆளுநரின் பிடிவாத குணத்தினால், நீட்தேர்வினால் மகன், தந்தை ஒரேநேரத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே ஆளுநர் ரவி மனம் இறங்கி, தனது பிடிவாதத்தை தளர்த்தி, நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர்): நீட்டின் கொடுங்கரம் மாணவர்களின் உயிரை பறித்துவந்த நிலையில், தற்போது குடும்பத்தினரின் உயிரையும் பறிக்கும் தீவிர மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.

The post சென்னையில் தந்தை, மகன் தற்கொலை நீட் விலக்கு சட்டத்துக்கு ஒன்றிய அரசு உடனடியாக விலக்கு தர வேண்டும்: கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Chennai ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...