×

மக்கள் நலனை பாதுகாக்கவே ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் கவர்ச்சி அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்குகிறது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்

சென்னை: போனஸ் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சம்பாதிப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழ்நாடு அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ஆன்லைனில் விளையாடுபவர்கள் வழக்கு தொடரவில்லை. விளையாட்டை நடத்துபவர்கள் தான் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆன்லைனில் 24 மணி நேரமும் விளையாட முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் விளையாடக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்க முடியாது.

வீட்டில், அலுவலகத்தில் இருந்து ஆன்லைனில் விளையாட முடியும் என்பதால் இதை முறைப்படுத்த இயலாது. கிளப்களில் மாலை நேரங்களில் தான் ரம்மி விளையாட அனுமதிக்கப்படுகிறது. 5,000 ரூபாய் செலுத்தி விளையாடினால் 5250 ரூபாயை வழங்குகிறார்கள். இது நேரடியாக விளையாடும் போது நடக்காது. ஒரு நண்பரை சேர்த்தால் 5000 ரூபாய் வழங்குகிறார்கள். இதுபோல வேறு ஏதேனும் திறமைக்கான விளையாட்டுக்கு வழங்குகிறார்களா? போனஸ் வழங்கி அடிமையாக்குகின்றனர். இதன் மூலம் விளையாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன.

வழக்கமான ரம்மி விளையாட்டை விட இது முழுக்க முழுக்க வித்தியாசமானது. இதை அனுமதிக்க கூடாது என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 2,000 கோடி ரூபாய் வரை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. இதை அனுமதித்தால் எல்லா விளையாட்டுக்களிலும் நுழைந்து விடும். ஆன்லைனில் விளையாடுபவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது. போனஸ் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளால் அடிமையாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கி பொது ஒழுங்கை பாதிக்கச் செய்கிறது என்று ஆன்லைன் விளையாட்டு குறித்து ஆய்வு செய்த நீதிபதி சந்துரு அறிக்கையில் கூறியுள்ளார்.

மற்றவர்களின் திறமையை பயன்படுத்தி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. இந்த சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது. சூதாட்டத்தில் திறமை கிடையாது. தமிழ்நாட்டில்தான் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில் விளையாட்டுக்களை நடத்த தடை இல்லை. மாநில மக்களின் குறிப்பாக சிறார்கள் நலனை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைன் நிறுவனங்கள், மக்களை சுரண்டி, சூதாட்டம் நடத்துவது அடிப்படை உரிமையல்ல. இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார். இதையடுத்து, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரத்தின் வாதத்திற்காக விசாரணையை நீதிபதிகள் வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

The post மக்கள் நலனை பாதுகாக்கவே ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் கவர்ச்சி அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்குகிறது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...