![]()
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் பஜார் வீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், உத்திரமேரூர் பஜார் வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றிட வேண்டும்.
உத்திரமேரூர் புறவழிச்சாலை பணியினை உடனடியாக துவங்கிட வேண்டும். உத்திரமேரூர் பஜார் வீதியில் இட நெருக்கடியில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை இடமாற்றம் செய்திட வேண்டும். உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்திட வேண்டும். மருத்துவமனையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
