×

கத்தார் நாட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தவர் கைது

சென்னை: கத்தார் நாட்டிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை விமான நிலையம் வந்த தஞ்சாவூரை சேர்ந்த பயணியை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பினர். அதில், ஜோசப் என்பவரின் பாஸ்போர்ட் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், அவரை வெளியே விடாமல் நிறுத்தி வைத்து, பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தனர்.

இதில், தஞ்சாவூரை சேர்ந்த கருப்பையா என்பவர், ஜோசப் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்தது தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட ஜோசப்பை குடியுரிமை அதிகாரிகள் தனியறைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா (41), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் விசாவில் கத்தார் சென்றுள்ளார். அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பாமல், கத்தாரிலேயே சட்டவிரோதமாக தங்கி, கூலிவேலை பார்த்துள்ளார். தற்போது, சொந்த ஊரான இந்தியாவுக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். கத்தாருக்கு சுற்றுலா விசாவில் சென்று, அங்கு சட்டவிரோதமாக தங்கியதால், அவரது பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது.

எனவே, அதே பாஸ்போர்ட்டில் இந்தியாவுக்கு திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் போலி பாஸ்போர்ட் தயாரித்து வழங்கும் ஏஜென்ட்களை கருப்பையா அணுகி, அவர்களிடம் பணம் கொடுத்து, ஜோசப் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். பின்னர் ஜோசப் என்ற பெயரில் போலி அடையாள அட்டைகளுடன் கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து தஞ்சாவூரை சேர்ந்த கருப்பையாவை கைது செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜோசப்பை அழைத்து சென்று, காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்த ஏஜென்ட்கள் யார், இதற்காக அவர்கள் எவ்வளவு பணம் பெற்றனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

The post கத்தார் நாட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Qatar ,Thanjavur ,Chennai airport ,Dinakaran ,
× RELATED கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூவர் கைது