×

போலீஸ் என மிரட்டி தனியார் ஊழியரிடம் ரூ3.5 லட்சம் பறிப்பு

அண்ணாநகர்: சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் ராவ் (44). இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் அலுவலகத்தில் வெளிநாட்டு பணத்தை, இந்திய ரூபாயாக மாற்றி கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இந்த அலுவலகத்தின் கிளைகள் அண்ணாநகர், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அண்ணாநகரில் உள்ள அலுவலகத்துக்கு ரூ3.5 லட்சம் தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்லாவரம் கிளையில் இருந்து மணி என்ற ஊழியர், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ரூ3.5 லட்சத்தை கொண்டு வந்தார். பின்னர், அந்த பணத்தை பிரபாகர் ராவ், மணியிடம் இருந்து வாங்கிக்கொண்டு அங்கிருந்து பைக்கில் புறப்பட்டார்.

அண்ணாநகர் பகுதியில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், இவரது பைக்கை வழி மறித்து, ‘‘நாங்கள் அண்ணாநகர் போலீஸ். உங்கள் மீது சந்தேகம் உள்ளது. எனவே, உங்களிடம் உள்ள பையை சோதனை செய்ய வேண்டும்,’’ என்று கூறி, அவரது பையை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் இருந்த ரூ3.5 லட்சத்துக்கு உரிய ஆவணத்தை கேட்டுள்ளனர். ஆனால், தன்னிடம் ஆவணம் ஏதும் இல்லை என்றதால், அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு வாருங்கள். விசாரணைக்கு பிறகு பணத்ைத ஒப்படைத்து விடுகிறோம்,’’ என்று கூறி, பணத்தை பறிமுதல் செய்து சென்றனர்.

இதன்பிறகு, பிரபாகர் ராவ் அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்தபோது, காவலர்கள் யாரும் இதுபோன்ற பணத்தை பெற்று வரவில்லை, என தெரிந்தது. இதுகுறித்து பிரபாகர் ராவ், அண்ணாநகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post போலீஸ் என மிரட்டி தனியார் ஊழியரிடம் ரூ3.5 லட்சம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Prabhakar Rao ,Choolaimedu ,
× RELATED திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை...