×

கூடுவாஞ்சேரியில் பேருந்து நிலையத்திற்குள் வராத பேருந்துகள்: நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வந்து செல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, பேருந்துகள் உள்ளே வந்து செல்ல சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சென்னையில் இருந்து வரும் மாநகர பேருந்துகளும், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளும், பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாமல் ஜிஎஸ்டி சாலையிலேயே நிறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றி செல்கின்றன.

இதில், பேருந்திற்காக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடுரோட்டிலேயே மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பெரும் விபத்து ஏற்படுவதற்குள் அனைத்து பேருந்துகளையும் நிலையத்திற்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சென்னை பிராட்வே, ஆவடி, அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 70க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் கூடுவாஞ்சேரிக்கு வந்து செல்கின்றன.

இதில், கூடுவாஞ்சேரிக்கு வந்து செல்லும் மாநகர பேருந்துகளும், இதேபோல் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய சேலம், திருச்சி, கோயம்புத்தூர், விழுப்புரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகளும் மேலும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு நோக்கி செல்லும் மாநகர பேருந்துகளும் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்குள் உள்ளே வந்து செல்வதில்லை. பேருந்து நிறுத்தத்தின் உள்ளே தனியார் வாகனங்கள் அத்து மீறி நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதேபோல், ஆட்டோகள் நிறுத்தி வைத்து பேருந்து நிலையத்தையோ ஆட்டோ நிறுத்தமாக மாற்றி விடுகின்றனர்.

பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தில் குடிமகன்கள் அமர்ந்தும், படுத்தும் தூங்கியும் வருகின்றனர். மேலும், குடிமகன் குடித்து விட்டு பிளாஸ்டிக் டம்ளர்கள், காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால், பேருந்துக்காக வரும் பயணிகள் காலில் குத்தி காயம் ஏற்பட்டு அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை. எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு அனைத்து பேருந்துகளையும் பேருந்து நிலையத்திற்குள் உள்ளே வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்,’’ வலியுறுத்துகின்றனர்.

* பல்வேறு வசதிகள் உண்டு
கூடுவாஞ்சேரியில் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்காக ரூ.2 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் 2012ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில், நேரக்காப்பாளர் அறை, பயணிகள் தங்கும் இடம், தாய்ப்பால் ஊட்டும் அறை, கழிப்பறை, குளியல் அறை, பேருந்துகள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு வரும் மாநகர பேருந்துகளை தவிர, செங்கல்பட்டு நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் உள்ளே வந்து செல்வதில்லை.

* பேருந்துக்காக நடுரோட்டில்….
பேருந்து நிலையம் திறக்கப்பட்ட சில மாதங்களில் மட்டுமே உள்ளே வந்து சென்ற பேருந்துகள் தற்போது, முற்றிலுமாக உள்ளே வந்து செல்வதில்லை. இதனால், பேருந்து நிலையம் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்திக்காக, மணிகணக்கில் நடுரோட்டிலேயே காத்திருக்கின்றனர். இங்கு பாதுகாப்பு பணியில் போலீசையும் ஈடுபடுத்துவது கிடையாது. எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என்ற ஆபத்தை உணராமல் நடு ரோட்டிலேயே மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

The post கூடுவாஞ்சேரியில் பேருந்து நிலையத்திற்குள் வராத பேருந்துகள்: நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Guduvancheri ,Goodovancheri ,Gootuwancheri ,station ,Gootuvancheri ,Dinakaran ,
× RELATED வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை பரிதாப பலி