×

ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை செல்லும் டி1 பேருந்து சேவை மீண்டும் இயக்கம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார், பொதுமக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை செல்லும் டி1 அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. டி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ இப்பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதனால் பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பத்திரப் பதிவுத்துறை என அனைத்து அலுவலகங்களும் செயல்படுகின்றன.

அதே போல் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஏகாட்டூர், கடம்பத்தூர், மணவூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு டி1 என்ற அரசு பேருந்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தனர். திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த டி1 என்ற அரசுப் பேருந்து ஜெ.என்.சாலை வழியாக வீரராகவப் பெருமாள் கோயில் அமைந்துள்ள திருவள்ளூர் தேரடி வரை செல்லும்.

இதனால் இந்த பேருந்து தேரடி- ரயிலடி பேருந்து என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதனால் மருத்துவமனைக்கு செல்பவர்கள், நகராட்சி அலுவலகத்திற்கு செல்லக்கூடியவர்கள் இந்த பேருந்துகளை பயன்படுத்தி வந்தனர். மேலும் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியகுப்பம், காமராஜபுரம், புங்கத்தூர், மணவாளநகர் போன்ற பல்வேறு கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகிலிருந்து புறப்படும் டி1 என்ற அரசுப் பேருந்தில் பயணித்து பள்ளிக்கு செல்வது வழக்கம். அரசு சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து அட்டையும் வழங்கப்பட்டு வருவதால் மாணவ மாணவிகள் இலவசமாக பயணித்து வந்தனர்.

திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை வரும் பேருந்தில் செல்லும் மாணவ மாணவிகள் அங்கிருந்து சுலபமாக பள்ளிக்கு சென்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டி1 என்ற எண்ணில் 5 பேருந்துகள் இயங்கி வந்தது. இந்நிலையில் 5 பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. இதனால் தனியார் பேருந்துகள் மட்டுமே ரயிலடியிலிருந்து தேரடிக்கு சென்று வந்தது. மாணவ மாணவிகள் தனியார் பேருந்து அல்லது ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். எனவே ரயில் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் வசதிக்காக பேருந்துகளை மீண்டும் டி1 பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, டி1 என்ற பேருந்து மூலம் போதிய வருவாய் இல்லாததால் நிறுத்திவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து தேரடி – ரயிலடிக்கு செல்லும் தனியார் பேருந்துகள் காலை முதல் இரவு வரை நல்ல லாபத்துடனேயே இயங்கி வந்தன. இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்லும் நிலை உருவாகியது. எனவே தனியார் பேருந்துகளை அதிகளவில் இயக்க அளித்த அனுமதியை ரத்து செய்து டி1 பேருந்தை மீண்டும் இயக்கினால் ஆயிரக்கணக்கான பயணிகள் நாள் தோறும் பயன்படுத்தும் போது அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவள்ளூர் தொகுதி பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், திருவள்ளூர் மண்டலத்தின் சார்பில், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனின் முயற்சியால் நேற்று முதல் டி1 என்ற திருவள்ளூர் ரயிலடி – தேரடி நகர பேருந்து சேவையை மீண்டும் தொடங்கி வைக்கும் விழா நேற்று நடைபெற்றது.

வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை தாங்கி டி1 என்ற திருவள்ளூர் ரயிலடி – தேரடி நகர பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனால் ரயிலடி – தேரடி வழித்தடத்தில் நாள்தோறும் தேரடியில் இருந்து ரெயிலடிக்கு 41 புறப்பாடும் ரயிலடியிலிருந்து தேரடிக்கு 41 முறையும் மொத்தமாக 82 பயண நடைகள் தினசரி 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதியும் உண்டு என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத் தலைவர் திராவிடபக்தன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன், நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் நெடுஞ்செழியன், துணை மேலாளர் ஸ்ரீதர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

*இலவச பேருந்து பயண அட்டை
7ம் வகுப்பு மாணவன் ஸாகித்ராம்: திருவள்ளூர், பெரியகுப்பம், மேட்டுத் தெருவில் வசித்து வருகிறேன். நான் தற்போது திருவள்ளூரில் உள்ள டிஆர்பிசிசி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறேன். டி1 என்ற அரசு நகர பேருந்து இயக்கப்படாததால் இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கவில்லை. இதனால் தினமும் பள்ளிக்கு போகும் போது ரூ.20, திரும்பி வர ரூ.20 என நாள் தோறும் ரூ.40 ஆட்டோவுக்கு செலவு செய்ய வேண்டி இருந்தது. இதனால் வீட்டில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது டி1 என்ற அரசு நகர பேருந்து இயக்குவதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சி அடைவார்கள். எனவே நிர்வாகமும் இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்றும் மாணவன் கேட்டுக் கொண்டான்.

The post ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை செல்லும் டி1 பேருந்து சேவை மீண்டும் இயக்கம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார், பொதுமக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : D1 ,Theradi ,MLA ,Thiruvallur ,T1 government bus service ,Thiruvallur railway station ,DG Rajendran ,
× RELATED மோ(ச)டி வித்தை தமிழ்நாட்டில் எடுபடாது: வைகோ பேச்சு