×

இமாச்சலில் மேகவெடிப்பு: கனமழை, நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலி

சிம்லா: இமாச்சலில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி மாயமாகியுள்ளனர். இமாச்சலில் மேகவெடிப்பு காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோசமான மழையினால் 752 சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிவன்கோயில் புதைந்தது.

இந்த கோயிலில் ஏராளமான மக்கள் வழிபாடுக்காக திரண்டு இருந்தனர். கோயில் நிலச்சரிவில் இடிந்ததால் பலர் அதில் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளில் இருந்து 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மண் குவியலில் 15 பேர் வரை சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. மேலும் பஜில் பகுதியில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியானார்கள். 17 பேர் மீட்கப்பட்டனர்.சோலன் மாவட்டத்தில் ஜடோன் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மேக வெடிப்பில் மட்டும் 7 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மேலும் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பலேராவில் இரண்டு சிறுவர்களும், பனால் கிராமத்தில் ஒரு பெண்ணும், ஹமிர்பூரில் 3 பேரும் உயிரிழந்தனர். 2 பேரை காணவில்லை. செக்லி பஞ்சாயத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். இதுவரை இமாச்சல் மழையில் 51 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்பி வைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். காங்ராவில் அதிகபட்சமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் 273 மிமீ மழை பெய்துள்ளது. தர்மசாலாவில் 250 மிமீ மழை பெய்துள்ளது. இன்றும் கனமழை கொட்டும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது. ஆக.18ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இமாச்சலில் மேகவெடிப்பு: கனமழை, நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Cloudburst ,Shimla ,Himachal ,Dinakaran ,
× RELATED சிறுகதை-என் உயிரிலே நீ கலந்தாய்…