×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 2,600 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

காரைக்குடி: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் நமது பழமையான கலாச்சாரத்தை அறிய உதவும் என காரைக்குடியை சேர்ந்த வரலாற்று பேராசிரியர் முனைவர் தி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: ராமநாபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள கருங்குடி கண்மாய் நீரோடை அருகே செந்தில்குமார் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இங்கு கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் அதிகளவில் காணப்படுவதாக ஏ.ஆர்.மங்கலம் தொழிலதிபர் கார்த்திக் வசந்த், கருங்குடி செந்தில்குமார் ஆகியோர் எங்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கருங்குடி திடலில் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தோம். இதில், ஏராளமான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் அதிகம் கிடைத்துள்ளன. இது தவிர வட்ட சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழியின் பாகங்கள், பானை தாங்கி ஓடுகள் கண்டறியப்பட்டன.

இதனை ஆய்வு செய்ததில், சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிய வருகிறது. இந்த முதுமக்கள் தாழிகளை பொறுத்தவரை இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தியுள்ளனர். இங்கு கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கிடைக்கப்பட்டதன் மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சாரம், தமிழ் நாகரீகம் இருந்தது தெரிய வருகிறது. இதுபோன்ற பானை ஓடுகள் தற்போது பரவலாக கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் அகழாய்வில் கிடைத்து வருகிறது. நம் கலாச்சாரத்தை பற்றி கண்டறிய இதுபோன்ற ஆய்வு பெரிதும் உதவுகிறது. இங்கு உரல் மற்றும் பொம்மை சிலை ஆகிய பாகங்களும் கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைத்துள்ள பானை ஓடுகள், நாகரீக கலாச்சாரத்தை அறிய உதவியாக இருக்கும்’ என்றார்.

The post ஆர்.எஸ்.மங்கலம் அருகே 2,600 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : KaraKudi ,Mangalam ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் மாட்டுச் சாணத்தை கஞ்சா...