×

சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக்கடன் வழங்கிய 6 வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் 9 தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நகர்ப்புர சுய உதவிக் குழுக்கள், நகர்ப்புர சாலையோர வியாபாரிகள், திறன் பயிற்சி பெற்ற இளைஞர்கள், சிறு தொழில் முனைவோர்கள், வங்கியாளர்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர், மகளிரின் முன்னேற்றத்திற்காக, 1989ம் ஆண்டு முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நகர்ப்புர குடும்பங்களின் வறுமையைப் போக்கவும், சமூக அமைப்புகள் அமைத்து, திறன் வளர்ப்பு பயிற்சி மூலமாகவும் மற்றும் வங்கி கடன் இணைப்பு மூலமாகவும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இயக்கமாகும்.
2014ம் ஆண்டு முதல் இந்த இயக்கமானது மாநிலம் முழுவதும் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கம் மூலம் 14.5 லட்சம் ஏழை குடும்பங்களை உள்ளடக்கிய 1.30 லட்சம் நகர்ப்புர சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படும் 1808 நகர்ப்புர சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 23,424 மகளிர் சகோதரிகள் பயன் பெறும் வகையில் 100 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள், உணவுத் தர பயிற்சி பெற்று சான்றிதழ் பெறவுள்ள 182 நகர்ப்புர சாலையோர வியாபாரிகளில் 50 நபர்களுக்கு இன்றைய தினம் உணவு தரச் சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புர சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன்கள் வழங்கிய ஆறு வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் 9 தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு , பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, வி. க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி , ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் நா. எழிலன் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப.,, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., செயல் இயக்குநர் பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள், வங்கியாளர்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சுய உதவிக் குழு மகளிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக்கடன் வழங்கிய 6 வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் 9 தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udaiyanidhi Stalin ,Banks ,Banker Awards ,9 Vocational Training Institutes ,Help Groups ,Chennai ,Youth Welfare ,Development ,Tamil Nadu Women's Development Institute ,6 Banks Banker Awards ,Vocational Training Institutions ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...