×

புதன் – சுக்கிரன் என்ற ஸ்ரீபதி யோகம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

ஸ்ரீஎன்பது லட்சுமியின் அம்சமான சுக்கிரனையும், `பதி’ என்பது புதனின் அம்சமான பெருமாளையும் குறிக்கிறது. புதனை புத்திகாரகன் என்றும், சுக்கிரனை களத்திரகாரகன் என்றும் ஜோதிடத்தில் சொல்வார்கள். கிரகங்கள் எல்லாம் தனித்தனியாகத்தான் இயங்குகின்றன. புதன் – சுக்கிரன் கிரகங்களின் இணைவான ஸ்ரீபதி யோகத்தின் பலன்களை காணலாம். முக்கூட்டு கிரகங்கள் எனச் சொல்லக்கூடிய சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் எப்பொழுதும் இணைந்தும் பிரிந்தும் பயணித்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட முக்கூட்டு கிரகங்களில் சில நேரங்களில் புதன் – சுக்கிரன் மட்டும் இணைந்து சிலருக்கு இருக்கும். முக்கூட்டு கிரகங்கள் மூன்றும் 50 டிகிரிக்குள்தான் இருக்கும்.

அதை மீறி வெளியே செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. புதன் என்பது அலி கிரகமாக உள்ளது. சுக்கிரன் என்பது பெண் கிரகமாக உள்ளது. இந்த கிரகங்கள் இரண்டும் சுபர்களாக உள்ளன. ஆகவே, பலன்களும் சுபமாகவே இருக்கும். புதனும் சுக்கிரனும் எதிரெதிரெ பார்க்கும் வாய்ப்பில்லை. ஆகவே, இணைந்து சுபக்கிரகங்கள் பார்வையுடன் அசுப கிரகங்கள் பார்வை விழாமல் இருந்தால் சிறப்பான பலன்களுக்கு நிச்சயம் உத்தரவாதம்.

கன்னி ராசியில் சுக்கிரன் நீசமாகி புதன் உச்சம் பெறுகிறார். மீன ராசியில் புதன் நீசமாகி சுக்கிரன் உச்சம் பெறுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று இணைவு பெற்று விட்டுக்கொடுக்கும் தன்மை கொண்ட கிரகங்கள். ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சயனக் கோலத்தில், ஸ்ரீதேவி, பாதத்தில் சேவை செய்கிறார். திருப்பதியில் பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் பொழுது, ஸ்ரீதேவி, மலையடிவாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து சேவை செய்கிறார். சூரியன் இந்த இரண்டு கிரகங்களுக்கு நடுவே வந்தால் ஏதேனும் ஒரு கிரகம் அஸ்தங்கம் ஏற்பட வாய்ப்புண்டு. அச்சமயம் பலன்கள் மாறுபட்டிருக்கும். ரிஷபம், மிதுனம் மற்றும் துலாம் போன்ற ராசிகளில் ஸ்ரீபதி கிரக இணைவுகளால் குறைபடாத சுப பலன்கள் உண்டு.

புதன் – சுக்கிரன் கிரக இணைவு

பெரும்பாலும் நேரிடையாக இணைந்திருக்கும். சில தருணங்களில் நட்சத்திர சாரங்களின் வழியாக இணைவை பெற்றிருக்கும். அப்பொழுதும் இந்த ஸ்ரீபதி யோகம் செயல்படும் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். புதன், சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருக்கும். அதாவது, சுக்கிரன் மிதுன ராசியிலும், புதன் ரிஷப ராசியிலும் அல்லது புதன் துலா ராசியிலும் அல்லது சுக்கிரன் கன்னி ராசியிலும் அமர்ந்து பரிவர்த்தனை ஸ்ரீபதி யோகமாகும். சிலருக்கு திசா புத்தியின் வழியே இந்த சிறப்புகள் இருக்கும். புதன் திசையில் சுக்கிரன் புத்தியும், சுக்கிர திசையில் புதன் புத்தியும், இந்த ஸ்ரீபதி யோகத்தை செய்யும்.

புதன் – சுக்கிரன் இணைவு பலன்கள்

இவர்களுக்கு போட்டோகிராபி கலையில் அதிகம் நாட்டம் இருக்கும். இயற்கை அழகை ரசிப்பவர்கள். ரசனை மிக்கவர்கள். பல நற்குணங்களை கைவரப் பெற்றவராக இருப்பார். அதிகம் படித்திருப்பார். அப்படி படிக்காவிடிலும் படித்து தெரிந்து கொள்ளக்கூடிய கலைகளையும் திறமைகளையும் ஸ்ரீபதி யோகத்தால் எளிதாக கைவரப் பெற்றிருப்பர். புதுப்புது பொருட்களை வாங்கும் எண்ணம் இவர்களுக்கு இருக்கும். வீட்டில் எண்ணற்ற ஃபேன்ஸி பொருட்களை வாங்கி குவிப்பார்கள்.

மொபைல் போன்களை அதிக விலைக்கு வாங்கி உபயோகிப்பதுடன், புதுப்புது செயலிகளையும் டவுன்லோடு செய்யும் வழக்கம் இவர்களுக்கு இருக்கும். சிலர் நன்றாக படித்திருப்பர். முக்கியமாக கிராபிக்ஸ் துறையாகவோ அல்லது வீடியோ எடிட்டிங் துறையாகவோ இருக்கும். இவர்களுக்கு நட்பு வட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த நட்பு வட்டத்துடன் எப்பொழுதும் தொடர்புடன் இருப்பர்.

தன்னை அழகுபடுத்திக் கொள்வதை அதிகம் விரும்புவார்கள். சகல ஐஸ்வர்யங்களையும் பெறும் பாக்கியங்களை உடையவர்கள். இளமை தோற்றத்துடன் காட்சி அளிப்பார்கள். ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களுக்கு எதையும் புதிது புதிதாக கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். பெரிய மனிதர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். பேச்சால் கடினமான நேரங்களையும் சுபமாக மாற்றிக் கொள்வார்கள். இவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும். நகைச்சுவை உணர்வால் தன் சுற்றுப்புறத்தையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் பண்புடையவர்களாக இருப்பர். இவர்கள் அதிகம் ஆடம்பரமான வீடுகளை விரும்புவர்.

வண்டி வாகனங்களை சிலர் மாற்றிக்கொண்டே இருப்பர். சிலர் வாகனங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இந்த கிரகங்கள் தொழில் ஸ்தானத்தோடு இணைவு பெற்றிருந்தால், புதுப்புது வழிகளில் விற்பனைக்கான யுக்தியை கையாள்வார்கள். நமக்கே ஆச்சர்யம் அளிக்கும்.  ஸ்ரீபதி யோகம் உள்ளவர்கள் புதுமை விரும்பிகள். புதியதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். ஒரு பிரச்னை ஏற்படும் பொழுது புதிய யுக்தியை தேடுவார்கள். அந்த யுக்தியை பிரயோகித்தும் பார்ப்பார்கள்.

கலை தொடர்பான படிப்புகள் இந்த ஸ்ரீபதி இணைவில்தான் உண்டாகும். ஃபேஷன் டிசைன், மாடலிங் போன்ற கவர்ச்சியான கலை படிப்புகளும் இந்த கிரக இணைவில்தான் வரும். சிலருக்கு அழகான ஓவியம் வரையும் திறமையும் இக்கிரகத்தால் கைவரப் பெறும். இந்த புதன் – சுக்கிரன் கிரகங்கள் இணைந்து இருக்கும் ராசிக்கு தகுந்தவாறு சில பலன்கள் மாறுபடும்.

The post புதன் – சுக்கிரன் என்ற ஸ்ரீபதி யோகம் appeared first on Dinakaran.

Tags : Venus ,Sivaganesan ,Lakshmi ,Mercury ,
× RELATED சுக்கிரன் ராசியில், குரு சுகத்தைத் தருவாரா..?