×

அள்ளித்தரும் அட்சயபாத்திரம் முட்டைக்கோஸ்

கொஞ்சம் வெயிலடிக்கிறது. திடீரென மழை வருகிறது. ஆனால் எப்போதும் உடலுக்கு இதமான வெப்பநிலை நிலவுகிறது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு சென்றால் இந்த அற்புதத்தை தினமும் ரசிக்கலாம். இந்த சீதோஷ்ண நிலை மட்டுமல்ல. தக்காளி, முட்டைக்கோஸ், மஞ்சள், உருளைக்கிழங்கு, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் விளைந்து பசுமையாக காட்சியளிக்கும் விளைநிலங்களும் நம்மை ஒரு மோன நிலைக்கு கொண்டு செல்லும். அப்படித்தான் தாளவாடி அருகில் உள்ள பனகஹள்ளி என்ற ஊரில் அமைந்திருக்கும் முட்டைக்கோஸ் வயல் நம்மை ஈர்க்கும் அழகில் இருந்தது.

சத்தியமங்கலம் காட்டுப்பாதையில் பயணிக்க ஆரம்பித்ததும் பண்ணாரி அம்மன் கோயிலும், வனவிலங்குகளைக் காப்போம் என்ற அறிவிப்புப் பலகையும் நம்மை வரவேற்றன. பவானிசாகர் அணை, பசுமையான காட்டுமரங்கள் என பலவற்றை ரசித்தவாறே 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றால் வருகிறது தாளவாடி. இடையிடையே கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளும் வருகின்றன. இதையெல்லாம் தாண்டி தாளவாடியைக் கடந்து சென்றால் கன்னட நடிகர் ராஜ்குமார், அவரது மகன் புனித் ராஜ்குமார் ஆகியோரின் பூர்வீக கிராமமான தொட்ட கஜனூர் என்ற கிராமம் வருகிறது. அங்கிருந்தே ஆரம்பித்து விடுகின்றன முட்டைக்கோஸ் சாம்ராஜ்யம். ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் முட்டைக்கோஸ் வயல்கள் இப்போது அறுவடைக்கு வந்திருக்கின்றன. அவற்றில் உள்ளூர் வியாபாரிகள் ஆட்களை வைத்து முட்டைக்கோஸ்களை பறித்து மூட்டை கட்டி, வெளியூர்களுக்கு வாகனங்களில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பனக ஹல்லி கிராமத்தில் தனது வயலில் நடந்த அறுவடைப்பணிகளை கவனித்துக்கொண்டிருந்த விவசாயி வேலுசாமியைச் சந்தித்தோம்.

“ எங்களுக்கு சொந்தமா 22 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல தக்காளி, வெங்காயம், மஞ்சள், முட்டைக்கோஸ், கத்தரின்னு விவசாயம் செய்றோம். முட்டைக்கோஸ் 3 மாச பயிரா இருக்கு. இதை பக்குவமா பண்ணா கண்டிப்பா லாபம் பார்க்கலாம். இதனால நாங்க தொடர்ந்து இதை விவசாயம் பண்ணிட்டு வரோம்’’ என என்ட்ரி கொடுத்த வேலுசாமி முட்டைக்கோஸ் சாகுபடி குறித்து முழு விவரத்தையும் அடுக்க ஆரம்பித்தார்…“ முட்டைக்கோஸ் விவசாயம் பண்ண 2 முறை 5 கலப்பை கொண்ட டிராக்டர் மூலம் நல்லா உழவு ஓட்டணும். அப்புறம் ரோட்டோவேட்டர் மூலமா நல்லா கட்டியில்லாம ஒருமுறை ஓட்டுவோம். அதுக்கப்புறம் வெட்டுக்கலப்பை வச்சி 3 1/4 அடி அளவுள்ள மேட்டுப்பாத்தி அமைப்போம். மேட்டுப்பாத்தி அமைக்கும்போது 2 ஏக்கருக்கு 2 மூட்டை டிஏபியை அடியுரமா கொடுப்போம். மேட்டுப்பாத்தி நடுவுல சொட்டுநீர்க் குழாய் அமைப்போம். சொட்டுநீர்க் குழாயோட ரெண்டு பக்கமும் முட்டைக்கோஸ் நாற்றுகளை நடுவோம். ஒரு செடிக்கும், இன்னொரு செடிக்கும் நடுவுல ஒன்னே கால் அடி இடைவெளி இருக்கிற மாதிரி பாத்துக்கணும். நிலத்துல பாசனம் செஞ்ச பிறகு ஈரமண்ணுலதான் செடிகளை ஊன்றுவோம். ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். 28 நாள் வளர்ந்த நாற்றுகளை நர்சரியில் இருந்து வாங்கி வந்து நடவு பண்ணுவோம். ஒரு நாற்று 70 பைசான்னு வாங்குவோம். நாற்று வாங்க மட்டும் ரூ.17,500 செலவாகும்.

நடவு செய்றதுக்கு முன்னாடி களைக்கொல்லி வாங்கி தெளிப்போம். இதனால களைச்செடிகள் முளைக்காது. செடி நடவு செஞ்ச பிறகு 1 மாசத்துல கொஞ்சம் களை முளைக்கும். அப்ப ஒரு களையெடுப்போம். அதுக்கப்புறம்களை இருக்காது. செடிகளை நடவு செஞ்ச 7, 8 நாள்ல சிஓசி, குளோரிபைபாஸ் மருந்துகளைக் கலந்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் கொடுப்போம். இந்த மருந்துக்கலவை வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தி, வேர் நன்றாக வளர உதவும். 20ம் நாள்ல 100 கிலோ பாக்டம்பாசை ரெண்டு செடிக்கு நடுவுல வச்சி நீர் பாய்ச்சுவோம். 30, 40 நாள்ல 1261 உரத்தை சொட்டுநீர் மூலமா கொடுப்போம். 60வது நாள்ல 13045 உரமும், 70வது நாள்ல சிஎன் போரான், 77 நாள்ல பொட்டாஷ் சல்பேட் ஆகிய உரங்களை சொட்டுநீர் மூலமாக கொடுப்போம். வேளாண்துறை அதிகாரிகள்ட்ட ஆலோசனை செஞ்சி வாரம் ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்து அடிப்போம். இது மலைப்பிரதேசம் என்பதால் சீதோஷ்ண நிலை மாறிட்டே இருக்கும். அதுக்கேத்த மாதிரி பூச்சிகள், புழுக்கள் வரும். அதுக்கு தகுந்த மாதிரி மருந்துகளை அடிப்போம். மழை நாட்கள்ல வேரழுகல் நோய் வரும். அதுக்கேத்த மருந்துகளை வாங்கி அடிப்போம். இதுபோல சமயத்துக்கு ஏத்த மாதிரி மருந்து அடிப்போம்.

முட்டைக்கோஸ் வயல்ல இடையிடையில செண்டுமல்லி செடிகளை வைப்போம். வயலுக்கு வருகிற பூச்சிகள் இந்த செடியில உட்காந்துக்கும். பூச்செடிகள் பூச்சிகளை கவர்ந்திழுக்குறதால அதுங்க அங்கேயே உட்காந்துக்கும். இதனால முட்டைக்கோஸ் செடிங்க தப்பிக்கும்.இப்படி நல்லா பராமரிச்சிட்டு வந்தா 90 நாள்ல காய்கள் அறுவடைக்கு தயாராகிடும். ஏக்கருக்கு 15 லிருந்து 30 டன் வரை மகசூல் கிடைக்கும். சராசரியா 20 டன் எடுக்கலாம். 25 ஆயிரம் செடிகள்ல 7 ஆயிரம் செடிகள் வீணாகிடும். புழு இருக்கும். இல்லைன்னா காய்கள் முத்தி விலைக்கு போகாது. 18 ஆயிரம் செடிகள்ல இருமுறை காய் பறிக்கலாம். ஒரு முட்டைக்கோஸ் அரை கிலோ முதல் 3 கிலோ வரை எடை வரும். இதில 2 கிலோவுக்கு கம்மியா இருக்கிறதுதான் விற்பனையாகும். 3 கிலோ போச்சுன்னா விக்காது. அதனால் பக்குவமான பதம் வர மாதிரி பாத்துக்கணும். அறுவடை சமயங்கள்ல உள்ளூர் வியாபாரிகள் வயலுக்கே வந்து பூக்களை அறுவடை செஞ்சி எடுத்துட்டு போயிடுறாங்க. ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய்ல இருந்து 30 ரூபாய் வரை விலை கிடைக்கும். சராசரியா 6 ரூபாய் கிடைக்கும். 20 டன்னுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். விதை, நடவுச் செலவு, பராமரிப்புச் செலவுன்னு ஏக்கருக்கு அதிகபட்சமா 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். மீதி 70 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும். இங்க வாங்குற முட்டைக்கோஸ்களை வியாபாரிங்களே மூட்டை கட்டி வாகனம் மூலமா ஈரோடு, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், திருப்பூர், திருநெல்வேலி, கேரளான்னு அனுப்பி வைக்கிறாங்க. தாளவாடி பகுதிகள்ல தொடர்ச்சியா விவசாயம் நடக்குறதால வியாபாரிகள் இங்க வண்டி வச்சி சுத்திக்கிட்டே இருப்பாங்க. இதனால எங்களுக்கு விற்பனையில பிரச்னை இல்லாம இருக்கு.

முட்டைக்கோஸ் அறுவடை முடிஞ்சவுடனே அப்படியே செடிகளோட உழவு பண்ணிடுவோம். இது மண்ணுக்கு நல்ல உரமாகிடும். அப்புறம் உழவு பண்ணி உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை மாத்தி மாத்தி பயிர் பண்ணுவோம். காலத்துக்கு ஏத்த மாதிரி பயிர் பண்ணுவோம். கார்த்திகை, மார்கழி மாசங்கள்ல வெங்காயம் பயிர் பண்ணுவோம். வெயில் காலங்கள்ல முட்டைக்கோஸ் விளைச்சல் குறையும். மழைக்காலத்துல நல்லா வரும். அதனால மழைக்காலத்துல பூக்கள் வளருகிற மாதிரி விவசாயம் பண்ணுவோம். களிமண், செம்மண் பூமியில முட்டைக்கோஸ் நல்லா வரும். இந்தப்பகுதி அதுமாதிரி இருக்கிறதால நாங்க முட்டைக்கோஸை பயிர் செய்யுறோம். அப்புறம் லாபமும் இதுல உறுதியா கிடைக்குது. இதனால் முட்டைக்கோஸ் எங்களோட விருப்பப் பயிரா இருக்கு! என பூரிப்புடன் கூறி முடிக்கிறார் வேலுசாமி.
தொடர்புக்கு:
வேலுசாமி: 94420 94932.

இயற்கையோடு வாழ்க்கை

ஈரோடு மாவட்டத்தில் சமவெளியில் வாழும் பல விவசாயிகள் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை வாங்கி விவசாயம் செய்கிறார்கள். ஆரம்பத்தில் வீட்டுக்கு சென்றுவிட்டுத்தான் தாளவாடி வருவார்கள். போகப்போக தாளவாடியிலேயே செட்டில் ஆகிவிடுகிறார்கள். அதுபோலத்தான் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வேலுசாமி கடந்த 30 ஆண்டுக்கு முன்பு விவசாயம் செய்வதற்காக தாளவாடி வந்திருக்கிறார். இங்கிருக்கும் குளிரான சூழல், இயற்கையான காற்று போன்ற காரணிகளால் இங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இதேபோல பல நகரவாசிகளும் தாளவாடியில் தங்கிவிட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைதான் என்கிறார்கள்.

வனவிலங்கு பிரச்னை இல்லை

தாளவாடி பகுதி மலைப்பிரதேசமாக இருப்பதால் காட்டுப்பன்றி, யானை போன்ற வனவிலங்குகளின் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவை சர்வசாதாரணமாக வயல் பகுதிகளில் நடமாடும். அவ்வாறு நடமாடும் விலங்குகள் முட்டைக்கோஸை மட்டும் தொடுவதில்லை. அவை நடந்து செல்லும்போது செடிகள் சேதமாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் இழப்பு ஏற்படாது.

 

The post அள்ளித்தரும் அட்சயபாத்திரம் முட்டைக்கோஸ் appeared first on Dinakaran.

Tags : Kale ,Erode district ,Thalawadi ,
× RELATED தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை