×

சோழவந்தானில் அமைந்துள்ள ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலை புனரமைக்க வேண்டும்

*கும்பாபிஷேகம் நடத்தவும் கோரிக்கை

சோழவந்தான் : சோழவந்தானில் அமைந்துள்ள ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சோழவந்தானில் புகழ்பெற்ற வைணவத் தலமான ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இக்கோயில், 5ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்ட வரலாற்று பெருமையுடையதாகும்.

இதிகாசமானராமாயனத்துடன் தொடர்புடைய இக்கோயிலில், மூலவராக தேவி, பூதேவி சமேதரராக நாராயணப் பெருமாள் உள்ளார். இப்பகுதியின் பெரும்பாலான திருமணங்கள் இக்கோயிலில் தான் நடக்கும். வைணவ தலங்களுக்குரிய பிரமோத்ஸவ விழா, சித்ரா பௌர்ணமி கள்ளழகர் விழா, சொர்க்க வாசல் திறப்பு உள்ளிட்ட அனைத்து விழாக்களும், பூஜைகளும் இங்கு விமரிசையாக நடைபெறும்.

இக்கோயிலில் உள்ள மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை பூஜையும், ஜெய வீர ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை பூஜையும், மூலவர், உற்சவர்களுக்கு தினமும் சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனையும் நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும். இங்கு கற்களால் ஆன சுவற்றில் உள்ள வட்டெழுத்துக்கள் இக்கோயிலின் தொன்மையை வெளிப்படுத்துகிறது. இத்தகைய சிறப்பான கோயிலுக்கு கடந்த 16.03.2003 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 20 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. எனவே இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துமாறு பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வரலாற்று நூலாசிரியரும், சமூக ஆர்வலருமான ஜனகராஜ் கூறுகையில் ‘‘ஆன்மீக பூமியான சோழவந்தானின் தொன்மையை, ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் மூலம் அறியலாம். மதுரையைப்போல் இங்கு நடைபெறும் கள்ளழகர் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 20 ஆண்டுகளுக்கும் மேலானதால், பல இடங்களில் விரிசல்களும், கோபுர பதுமைகள் சிதிலமாகியும் உள்ளது. எனவே கோயிலை பழமை மாறாமல் புனரமைத்து, வட்டெழுத்துக்கள் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளை தொன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும். இக்கோயிலில் இப்பகுதி ஏழைகள் பலரின் திருமணம் நடக்கிறது.

அதன்பிறகு அவர்கள் உணவருந்த வெளியே உள்ள ஓட்டல்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, இக்கோயில் வளாகத்தில் ஒரு திருமண மண்டபம் கட்டினால் பல ஏழைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், கோயில் நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைக்கும். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியில் பல கோயில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதே போல் 1500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோயிலையும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

The post சோழவந்தானில் அமைந்துள்ள ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலை புனரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Jenaka Narayana Perumal temple ,Cholavanthan ,Cholavantan ,
× RELATED மாரியம்மன் தரிசனம்