×

ஓணம் பண்டிகையையொட்டி நேந்திரன் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

*விலையும் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வாழைக்காய் ஏலம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

அதனை இந்த ஏல மையத்தில் ஏலம் விட்டு வியாபாரிகள் போட்டி போட்டு எடுத்துச்செல்வதும் வழக்கம்.இந்த மையத்தில் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன், கதளி, பூவன், தேன் வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழைத்தார்கள் விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.45 வரையும், கதளி வாழைத்தார் கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.60 வரையும் விற்பனையானது.

மேலும், பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.550 வரையும், தேன் வாழை தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.700 வரையும், ரஸ்தாளி தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.500 வரைக்கும், ரோபஸ்டா அதிகபட்சமாக தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.300 வரையும், செவ்வாழை அதிகபட்சமாக தார் ஒன்றிற்கு ரூ.1000 வரையும் ஏலம் போனது.

குறிப்பாக நேந்திரன் வாழை விலை கடந்த சில வாரங்களாக கிலோ ஒன்றிற்கு ரூ.30 வரை விற்பனையான நிலையில் தற்போது விலை அதிகபட்சமாக ரூ.45 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஏல மையத்தின் நிர்வாகிகள் சின்னராஜ் மற்றும் வெள்ளியங்கிரி கூறுகையில், கேரள மாநிலத்தில் வரும் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள மக்களின் பிடித்த உணவுகளில் ஒன்றான நேந்திரன் வாழைத்தார்கள் வரத்து சற்று அதிகமாகவே உள்ளது. ஓணம் சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நேந்திரன் வாழைத்தார்கள் அதிகளவில் ஏல மையத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்து ஆர்வத்துடன் போட்டி போட்டு நேந்திரன் வாழைத்தார்களை வாங்கிச்சென்றனர்.
வரத்தும் அதிகரித்து அதே நேரத்தில் விலையும்அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post ஓணம் பண்டிகையையொட்டி நேந்திரன் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Onam festival ,Mettupalayam ,Annur ,South Thirupati Nalroad ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...