×

கம்பம் நகரின் மத்தியில் விதிமீறி செயல்படும் பட்டாசு கடைகள்

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?

கம்பம் : தேனி மாவட்டத்தின் வளர்ந்து வரும் நகராக கம்பம் விளங்கிறது.இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர்.கம்பத்தில் உள்ள பலசரக்கு, வீட்டு உபயோக கடைகள், மருத்துவமனை, கல்வி கூடங்கள், நகைக்கடை என பல்வேறு தேவைகளுக்கென கம்பத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் அருகில் உள்ள கேரளாவில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கம்பத்துக்கு வந்து செல்கின்றனர். இதனால் கம்பத்தில் அதிகளவில் கடைகள் உள்ளன. இன்னும் 3 மாதத்தில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்யவிருக்கிறது.

அதனடிப்படையில் ஏராளமானோர் விண்ணப்பம் செய்வது வழக்கம்.இதில் கம்பம் நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் நிரந்தர பட்டாசு கடைகள் விதிமுறைகளை மீறி இயங்கி வருகிறது கண்கூடாக தெரிகிறது.பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த கம்பத்தின் இதய பகுதியான அரசமரம் பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக பட்டாசு கடை நிரந்தரமாக இயங்கி வருகிறது.வேலப்பர் கோயில் தெருவிலும் இதே போல வணிக நிறுவனங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசு கடைகள் இயங்கி வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு கடைகளில் சிறு அசம்பாவிதம் நடந்தாலும் பெருமளவில் உயிர் சேதம் ஏற்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

வெடிபொருட்கள் சட்ட விதிகளின் படி பொதுமக்கள் குடியிருப்பு, மருத்துவமனை, கல்விக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவை இருக்கும் பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்க்கு அப்பாற்பட்டு பட்டாசு கடை வைக்க வேண்டும் என்பதுடன் பட்டாசு கடைகளில் 2 கேஜி கொள்ளளவு உள்ள 10 மீ., தூரம் பீய்ச்சி அடிக்க கூடிய தீயணைப்பான் வைக்க வேண்டும். கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்தி ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

கடையில் 500 லி., தண்ணீரும்,மணல் வாளிகளும் எப்போதும் இருக்க வேண்டும். கடை உரிமையாளர், தொழிலாளர்கள் பாதுகாப்பு பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். பட்டாசு கடைகள் 9 சதுர மீட்டருக்கு குறைவில்லாமலும், 25 சதுர மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் உடனடியாக அலாரம் அடிக்க ஐ.எஸ்.ஓ., தரச்சான்று கருவி பொருத்த வேண்டும். எளிதில் தீப்பிடிக்காத மின் வயர் சுவிட்சுகளை கடைகளில் பயன்படுத்த வேண்டும்.என விதிமுறைகள் இருந்தாலும் இந்த விதிமுறைகளை யாரும் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘விழா காலங்களில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க, வெடி பொருள் சட்டம் 84ன்படி உரிமம் வழங்கப்படுகிறது. வெடி பொருளின் அளவை பொருத்து மாநகர் காவல் ஆணையர் அல்லது வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி அல்லது தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் பட்டாசு கடை வைக்க அனுமதி பெற வேண்டும்.

தீயணைப்பு துறை, கடை அமையும் நிலத்தின் உரிமையாளர், சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் தடையில்லா சான்று பெற்று மனுவுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். தற்காலிக பட்டாசு கடைகளை பொறுத்தவரை பொதுமக்கள் வசிப்பிடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றாத பொருள்களால் கடைகள் அமைக்க வேண்டும் வெளிநபர்கள் உள்ளே நுழைந்துவிடாதபடி கடை முற்றிலும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். எதிர் எதிரில் பட்டாசு கடை அமைந்திருக்கக் கூடாது. கடை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 50 மீட்டர் தொலைவில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

கான்கீரிட் கட்டிடத்தில் கடை இயங்க வேண்டும். தரை தளத்தில் கடை இருக்க வேண்டும்.லிப்ட் மற்றும் படிக்கட்டுகள் அருகில் கடை போடக்கூடாது. மேலும் பட்டாசு கடை உரிமம் வழங்குவதற்கு முன்பு கடை அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகே உரிமம் வழங்க வேண்டும்.

ஆனால் இந்த விதிமுறைகள் காற்றில் பறக்கின்றன. பொதுமக்கள் அதிகளவில் கூடும் முக்கிய வீதிகளில் கண்டிப்பாக பட்டாசு கடை வைக்க கூடாது.ஆனால் கம்பத்தில் வணிக நிறுவனங்களுக்கு மத்தியில் தான் பட்டாசு கடைகள் இயங்குகின்றன. இதுபோன்ற கடைகள் மீது கலெக்டர் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்றனர்.

குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் மூட்டை மூட்டையாக பட்டாசுகள்

கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி கம்பம் 19 வது வார்டு பாரதியார் நகர் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி (42) என்பவர் வீட்டில் பட்டாசு வெடி சத்தம் கேட்டுள்ளது. உடனே இதுகுறித்து அப்பகுதி மக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் பட்டாசுகள் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பட்டாசுகளை கைப்பற்றிய போலீசார் சரக்கு ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவகாசி மற்றும் கம்பம்மெட்டுச் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு எதிரே உள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதி பெற்று கடைகள் நடத்தி வந்ததாகவும், அந்தக் கடைகளுக்காக கொள்முதல் செய்யப்பட்ட பட்டாசுகளை கடையில் வைக்க இடம் இல்லாததால் மீதி பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

கம்பத்தில் குடியிருப்பு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்த சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற விதிமீறல்கள் கம்பம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இதை மாவட்ட நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும். ஊருக்குள் இருக்கும் பட்டாசு கடைகளை இடம் மாற்றி ஒதுக்குப்பூர்வமான இடங்களில் கடைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து நடந்த பின் செயல்படாமல் தீபாவளி தொடங்குவதற்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தற்காலிக உரிமம் வழங்கும்போது ஊருக்குள் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் பட்டாசு கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கம்பம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

The post கம்பம் நகரின் மத்தியில் விதிமீறி செயல்படும் பட்டாசு கடைகள் appeared first on Dinakaran.

Tags : Kambam ,Kampam ,Theni district ,
× RELATED விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி...