×

கருவில்பாறை வலசு பகுதியில் ரூ.7.90 கோடியில் ஏரியை விரிவாக்கும் பணி தீவிரம்

*சிறந்த சுற்றுலா தலமாக மாறும்; அதிகாரிகள் தகவல்

ஈரோடு : ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருவில்பாறை வலசில் பகுதியில் உள்ள ஏரியை ரூ.7.90 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தி மழை நீர் சேகரிப்பை மேம்படுத்தும் பணிகளும், கரைகளை பலப்படுத்தும் பணிகளும் விறுவிறுப்பாகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து சிறந்த தலமாக மாறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஈரோடு மாநகராட்சி 3-ம் மண்டலத்திற்கு உட்பட்ட கருவில்பாறை வலசு பகுதியில் 26.65 ஏக்கர் பரப்பளவில் எல்லப்பாளையம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீரும், மழை நீரும் சேகரமாகும். இந்த ஏரி கருவில்பாறை, வில்லரசம்பட்டி, ராசாம்பாளையம், எஸ்.எஸ்.பி. நகர் உட்பட 3 கி.மீ சுற்றளவில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.

இந்த ஏரி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை சார்பில் ரூ.13.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, குளம் தூர் வாரப்பட்டு மேம்படுத்தப்பட்டது. குளத்தை சுற்றி சுமார் 2 கிலோ மீட்டருக்கு நடைபாதை மற்றும் குளத்திற்கு அருகே புல்வெளியுடன் கூடிய பூங்கா, குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல்கள், சறுக்கு விளையாட்டுகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும், குளத்தில் படகு சவாரிக்காக பைபரால் ஆன 2 படகுகளும் வாங்கப்பட்டு, படகு சவாரியும் துவங்கப்பட்டது. இதில், ஒவ்வொரு படகிலும் 4 பேர் லைப் ஜாக்கெட்டுடன் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஏரி திறக்கப்பட்டதும், ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினரும் மாலை நேரங்களில் வந்து சென்றனர். முக்கியமான பண்டிகை, விடுமுறை நாட்களில் மக்கள் வருகை அதிகமாக இருந்தது. படகு சவாரிக்காகவே அதிகளவில் மக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து சென்றனர். ஆனால் படகு சவாரி தொடங்கப்பட்ட சிறிது நாளிலேயே குளத்திற்கு நீர் வரத்து அடியோடு நின்றதால், படகு சவாரியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நாளடைவில் பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் வருகையும் குறைந்ததால் பூங்காவும் மூடப்பட்டது. இதனால், பூங்கா பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி பயன்பாடற்று கிடக்கிறது. எனவே, குளத்தையும், பூங்காவையும் சீரமைத்து, மீண்டும் படகு சவாரி துவங்க பொதுமக்கள் தொடா்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம், கருவில்பாறை வலசு எல்லப்பாளையம் ஏரியை மேம்படுத்த அரசுக்கு பரிந்துரை அனுப்பியது. இதையடுத்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளர், கருவில்பாறை வலசு ஏரியின் மேம்படுத்தும் பரிந்துரையை ஏற்று, ஈரோடு மாநகராட்சி 15-வது மத்திய நிதிக்குழு மானியம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலை மறுசீரமைப்பு செய்து, மழைநீர் சேமிப்பை மேம்படுத்தி, கரைகளையும் பலப்படுத்தி, ஏரியை விரிவுப்படுத்த ரூ.7.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி அளித்தார்.

இதன்பேரில், ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் கருவில்பாறை வலசு ஏரி மேம்படுத்தும் பணிகளை தனியார் மூலம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கருவில்பாறை வலசு ஏரியை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார் கூறியதாவது: கருவில்பாறை வலசு ஏரி மாநகராட்சியின் 15வது மத்திய நிதிக்குழு மானியம் ரூ.7.90 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இதில், ஏரியில் மழை நீர் சேமிப்பையும் மேம்படுத்தி, கரைகளை பலப்படுத்தி ஏரி விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் ஏரியில் தண்ணீர் தேங்கும் அளவு அதிகரிக்கும். படகு சவாரி மீண்டும் துவங்கப்படும்.

புதிதாக விரிவுபடுத்தப்பட்ட அனைத்து இடங்களின் கரைகளிலும் நடைபாதையும் அமைக்கப்படும். அதேபோல, பொழுதுபோக்கு பூங்கா அமைத்தும், குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் சீரமைப்பும் செய்யப்படும். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்தால், மக்களுக்கு இந்த ஏரி சிறந்த சுற்றுலா தலமாக அமையும் என நம்புகிறோம். இவ்வாறு பொறியாளர் விஜயகுமார் கூறினார்.

The post கருவில்பாறை வலசு பகுதியில் ரூ.7.90 கோடியில் ஏரியை விரிவாக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Toolbar ,Valasu ,Erode ,Erode Corporation ,Valasil ,Dinakaran ,
× RELATED ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து