
சென்னை: வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முழுமையாக வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. 5 நாள் காவல் முடிந்ததை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 12ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆக.25 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடங்கிய 3,000 பக்கங்களை கொண்ட ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. அனைத்து ஆவணங்களும் இரும்பு ட்ரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை தனக்கு வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தரக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு முறையீடு செய்தது. அமலாக்கத்துறை தரப்பிற்கு மனு குறித்த தகவலை தெரிவிக்க அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார். பெரும்பாலும் இந்த வழக்கு ஆகஸ்ட் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. அன்றைய தினம் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யவும் வாய்ப்புள்ளது. எனவே 2 மனுக்களும் சேர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
The post வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தனக்கு வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல்..!! appeared first on Dinakaran.