×

பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அன்னாரின் துணைவியார் ந. பார்வதி அம்மாள் அவர்களிடம் நூலுரிமைத் தொகையான ரூ.10 இலட்சத்திற்கான காசோலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.08.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேராசிரியர் மா. நன்னன் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரின் துணைவியார் ந.பார்வதி அம்மாள் அவர்களிடம் நூலுரிமை பரிவுத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 173 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 13.87 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுநாள்வரை சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ. இராசு, பேராசிரியர் க. அன்பழகன், முனைவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன், நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், திரு. நா. மம்மது, நெல்லை கண்ணன், கந்தர்வன் என்கிற நாகலிங்கம், சோமலே, முனைவர் ந. இராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகிய 16 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் நூலுரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.07.2023 அன்று சென்னை, சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் நடைபெற்ற பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில், நன்னன் அவருடைய நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் இருக்கின்ற காரணத்தால், அந்தப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன், தமிழ்நாடு அரசு சார்பில் நன்னன் அவர்களுக்கு புகழ் சேர்கிற வகையில் நன்னன் அவர்களின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்னன் அவர்களின் குடும்பத்தினரோ, உறவினர்களோ, வேறு யாரும் கோரிக்கைகளை இந்த நேரத்தில் வைக்கவில்லை. யாரும் வைக்காமல் இந்த கோரிக்கையை நான் அறிவிக்கிறேன் என்று சொன்னால், நன்னன் குடியில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில், இந்த அறிவிப்பை செய்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். அதற்கிணங்க, பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்கள் எழுதிய நூல்கள், கருத்துக் கருவூலங்கள் உலக மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அவரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது துணைவியார் ந. பார்வதி அம்மாள் அவர்களுக்கு நூலுரிமை பரிவுத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கி, சிறப்பித்தார்.

இந்நிகழ்வின்போது, பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்களின் மகள் அவ்வை அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வாசித்த கவிதை:

முதலமைச்சரவர்களுக்கு உள்ளார்ந்த நன்றி

நன்னனுக்கு நூற்றாண்டு நிறைவு
நிறை வாழ்வு வாழ்ந்த நன்னனுக்கு
நான் வந்து வாழ்த்துகிறேன் என்று
நிறைவான விழாவாக்கிய முதல்வரே

திராவிட உறவைச் சுட்டி பின்
தொடரும் உறவைச் சொல்லி எம்
தந்தையின் சிறப்பெல்லாம் அன்புடனே
தொடர்ந்து பேசிய சீர்மிகு செம்மலே

எழுதிய விரலுக்குக் கணையாழி அன்று
எழுத்துகளுக்கு நாட்டுடைமை ஆணை இன்று
எங்கும் பரவிப் பயன் விளைக்கும் என்று
எல்லார்க்கும் என்றே நிலைத்தது நன்று

நற்றமிழை என்றுமுளத் தமிழாகக் காக்க
நல்வழிகாட்டும் பெரியாரின் பெருநெறியை
நன்னன் முறையை நானிலத் துளோரெலாம்
நன்கு பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திட

நாட்டின் உடமையாய் நானிலத்தின் உடமையாய்
நூல்களை நன்னன் நூல்களை ஆக்கினீர்
நாடி வந்து கோராத போதும் தேடி வந்து
நற்செயல் புரிந்த மாண்பைப் போற்றுகிறோம்

நன்னன் குடியினர் நன்றி உணர்கிறோம்
நீவிர் நீடு வாழ்க எழு ஞாயிறாய் வாழ்க
நல்லாட்ச்சித் தொடர நல்லோர் வாழ
நலமுடன் நீவிர் நீடு வாழ்க வாழ்க.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர்
மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஔவை அருள், பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்களின் மகள்கள் வேண்மாள், அவ்வை மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

The post பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அன்னாரின் துணைவியார் ந. பார்வதி அம்மாள் அவர்களிடம் நூலுரிமைத் தொகையான ரூ.10 இலட்சத்திற்கான காசோலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Doctor ,Ma. Nannan ,Annar ,N. Tamil Nadu ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,G.K. Stalin ,Leadership Secretariat ,Department of Development of Tamil ,N. Tamil ,Nadu ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...