×

காவிரியில் வினாடிக்கு 18,000 கனஅடி நீர் கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்ய முடிவு..!!

டெல்லி: காவிரியில் வினாடிக்கு 18,000 கனஅடி நீர் கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை சரிவர பெய்யாத காரணமாகவும், கர்நாடகா காவிரியில் இருந்து திறந்து விட வேண்டிய நீரை திறந்து விடாததன் காரணமாக சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள குறுவை மற்றும் சம்பா நெற்பயிர்கள் கருகும் சூழல் உள்ளது. இதனிடையே டெல்லியில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் அண்மையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். காவிரியில் வினாடிக்கு 18,000 கனஅடி நீர் திறக்க தமிழக அரசு வலியுறுத்திய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து, காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர தமிழ்நாட்டிற்கு வேறு வழியில்லை. விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதி வென்று, காவிரி நீரை பெற்று தருவோம் என்பதில் நமது ஆட்சி உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காவிரியில் வினாடிக்கு 18,000 கனஅடி நீர் கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவை வினாடிக்கு 18,000 கனஅடி நீர் தேவை என்பதால் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்வது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post காவிரியில் வினாடிக்கு 18,000 கனஅடி நீர் கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்ய முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Supreme Court ,Karnataka ,Kaviri ,Delhi ,Government of Tamil Nadu ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...