×

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சி

 

திருக்கழுக்குன்றம், ஆக. 14: கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கழுக்குன்றத்தில் நேற்று சிறப்பு கைத்தறி கண்காட்சியை நேற்று கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் கைத்தறித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் கைத்தறி நெசவாளர் பகுதிகளில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் பயனடையும் வகையில், திருக்கழுக்குன்றம் கைத்தறி நெசவாளர்கள் பகுதியில் கைத்தறித்துறை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து திருக்கழுக்குன்றம் தேசுமுகிபேட்டையில் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

அப்போது, சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார். இம்மருத்துவ முகாமில் கைத்தறி நெசவாளர்களுக்கு பொது மருத்துவம், நரம்பியல், நீரிழிவு, இருதயநோய், மகப்பேறு மற்றும் மகளிர் நலன், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை, எலும்பு, குடல் மருத்துவம் உள்ளிட்ட சிகிச்கைகளும், பொது மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை, உடல் பருமன், சர்க்கரை, ரத்த அழுத்தம், எலும்பு, சிறுநீரக ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும், பொது சுகாதாரம், மகளிர் சுகாதாரம், ஆரோக்கியமான உணவுகள் மற்றும் வரும்முன் காப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இவ்விழாவின்போது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பங்குபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. மேலும், 20 கைத்தறி நெசவாளர்களுக்கு முதியோர் ஓய்வூதிய திட்ட ஒப்பளிப்பு ஆணைகள், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட தொகை ஒப்பளிப்பு ஆணை, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசால் நெசவாளர்களுக்கென செயல்படுத்தப்படும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், கலைஞரின் நூற்றாண்டு விழாவின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது. முன்னாள் எம்எல்ஏவும், திருக்கழுக்குன்றம் ஒன்றிய திமுக செயலாளருமான தமிழ்மணி, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் நெசவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Thirukkalukunram ,Thirukkalukkunram ,Chengalpattu district ,
× RELATED உலக நன்மைவேண்டி வேதகிரீஸ்வரர் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்