×

திரு.வி.க நகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.4 கோடியில் புதிய குடிநீர் குழாய்கள்: 10 ஆண்டு கால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

 

பெரம்பூர், ஆக.14: திருவிக நகர் அருந்ததி நகர் பகுதியில், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ரூ.4 கோடியில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்களின் 10 ஆண்டு கால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது. வடசென்னை பகுதி என்றாலே ஒரு காலத்தில் குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல், மழை பெய்தால் வீதி எங்கும் மழைநீர் தேக்கம், குடிநீரில் கழிவு நீர் கலப்பது போன்ற பல பிரச்னைகள் இருக்கும் என்று கூறப்பட்டது. தற்போது, அந்த காலம் மாறி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் மேம்பாலங்கள், அழகிய பூங்காக்கள், சாலை வசதி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு படிப்படியாக வடசென்னை பகுதி சென்னையின் மற்ற பகுதிகளைப் போன்று பிரகாசிக்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக, வடசென்னை பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த ஜீவா மேம்பாலம் மற்றும் கொருக்குப்பேட்டை மேம்பாலம் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. மேலும் காசிமேடு பகுதி உலகத் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட உள்ளது. இதுபோன்று வடசென்னையின் முக்கிய பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருவிக நகர் தொகுதியில் உள்ள அருந்ததி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள இடங்களில் கடந்த 10 ஆண்டுகளாகவே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதிகாரிகள் அவ்வப்போது இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தாலும், இது தீராத பிரச்னையாக இருந்து வந்தது.

குறிப்பிட்ட அந்தப் பகுதி அருகே ஓட்டேரி நல்லா கால்வாய் செல்வதால் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பும்போது குறிப்பிட்ட அருந்ததி நகர் பகுதியில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கும். இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் பலமுறை அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வீடுகளில் வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், இதுகுறித்து திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவியிடம் முறையிட்டனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தாயகம் கவி பலமுறை பேசியுள்ளார். அப்போது அவரது பேச்சு இருட்டடிப்பு செய்யப்பட்டு குறிப்பிட்ட அருந்ததி நகர் பகுதியில் சில அரசியல் காரணங்களுக்காக, அந்த பகுதி மக்களுக்கு ஒரு விடிவு ஏற்படாத சூழ்நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு குறிப்பிட்ட அருந்ததி நகர் பகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னை குறித்து திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி பலமுறை பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தொழில்துறை அமைச்சரும் அப்போதைய மதிப்பீட்டு குழுவின் தலைவருமான டி.ஆர்.பிராஜா தலைமையில் மதிப்பீட்டு குழு கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தாயகம் கவி எம்எல்ஏ கலந்துகொண்டு 71வது வார்டில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் பகுதியில் உள்ள செங்கண் தெரு, கந்தன் தெரு, வீரராகவன் தெரு, கோவிந்தன் தெரு, கோவிந்தபுரம், போலேரி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை சுட்டிக்காட்டி நீண்ட ஆண்டுகளாக இந்த பிரச்னை உள்ளது, இதனை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

அவர் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மதிப்பீட்டு குழு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோரால் பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு அருந்ததி நகர் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து முழுமையாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த அறிக்கையில் 8,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அந்த பகுதியில் 400 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளதாகவும், குறிப்பிட்ட அந்த பகுதியில் குடிநீர் தரத்தின் நிலைமை சரி இல்லை, எனவே அதை சரி செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் என்பதால் அவை முற்றிலும் பழுதடைந்து உள்ளதாகவும், அதனை நீக்கிவிட்டு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.4.02 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு தற்போது பணிகளை விரைந்து முடிப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் மற்றும் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட பணியை இன்று தொடங்கி வைக்க உள்ளனர். இதன் மூலம் அருந்ததி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழைய துருப்பிடித்த குடிநீர் குழாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த சுமார் 4,000க்கும் மேற்பட்ட அருந்ததி நகர் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post திரு.வி.க நகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.4 கோடியில் புதிய குடிநீர் குழாய்கள்: 10 ஆண்டு கால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு appeared first on Dinakaran.

Tags : Mr VK Nagar ,Perambur ,Tiruvik Nagar Arundhati Nagar ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு