×

மும்பை அருகே அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழப்பு

தானே: மும்பை அருகே தானேவை அடுத்த கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே கடந்த வெள்ளிக் கிழமையன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் 18 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள தானே கல்வா பகுதியில் மாநகராட்சி சார்பில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில், கடந்த வெள்ளிக் கிழமையன்று மட்டும் சிகிச்சைக்காக வந்த 5 பேர் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு எதிராக சம்பவத்தன்று இரவில் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கல்வா சத்ரபதி சிவாஜி மருத்துவமனையில், நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிலும் நேற்று முன்தினம் இரவு 10 மணியிலிருந்து நேற்று காலை 8 மணி வரை 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மருத்துவமனை தலைமை டாக்டர் அனிருத்தா மால்கவுங்கார் தெரிவித்ததாவது: உயிருக்கு போராடும் நிலையில் தனியார் மருத்துவமனையில் இருந்து மாநகராட்சி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்த 18 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அதில், 4 பேர் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். 13 பேர் அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்றுவந்தனர். இந்த நிலையில்தான் சிகிச்சை பலனின்றி உயிரழந்தனர். இவ்வாறு டாக்டர் அனிருத்தா தெரிவித்தார். தகவலறிந்து கல்வா மருத்துவமனைக்கு விரைந்த சுகாதாரத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த், இந்த விவகாரம் குறித்து 2 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஷிண்டே உத்தரவுப்படி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post மும்பை அருகே அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Thane ,Chhatrapati Shivaji Maharaj Hospital ,Kalwa ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!